சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகக் கலையரங்கில் 2025 ஜனவரி 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்றது.இது பற்றிய செய்தி ஏற்கெனவே விடுதலையில் வெளிவந்துள்ளது.
இக்கருத்தரங்கின் நிறைவு நாள் அன்று பார்வையாளர் ஒருவர், “சிந்து வெளி நாகரிகம், கீழடி நாகரிகம் இரண்டுக்கும் உள்ள சமய ஒற்றுமை – வேற்றுமை என்ன என்று அறிய விரும்புகிறேன்” என்று கேள்வி கேட்டார்.
இந்திய தொல்லியல் துறை இயக்குநர் மற்றும் கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்
“கிடைக்காதவற்றை பற்றி கேட்டீர்கள் என்றால் சொல்ல முடியுமா என்னால்.” (பலத்த கைத்தட்டல் )
ஏனென்றால் சிந்து சமவெளியிலும் ஒரு மதம் இருந்திருக்குமா என்று நாம் அனுமானிக்கிறோம்.அவ்வளவுதான். உண்மையாக சிந்துவெளிப் பண்பாட்டில் லிங்கம் என்று சொல்லுகிறோம். அது வளத்திற்கான குறியீடு(fertility cult symbol).அதேபோல் தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது. உறுதியான சான்றுகள் இல்லாமல் அதை நாம் எப்படி உறுதி செய்ய முடியும். (பலத்த கைத்தட்டல் )
அதேபோல் தான் கீழடியும் – மத ஆதாரங்களைத் தேடி நாம் மூக்கை நுழைக்க கூடாது. பண்பாட்டின் ஒரு கூறு தான் மதம். மதம் வளர்ந்தது பின்னால். மனிதத்தை முதலில் பார்க்கலாம். (பலத்த கைதட்டல்) பயமே தான் பக்தி.வேறு ஒன்றுமே இல்லை.என்றைக்கு மனிதன் பயப்பட ஆரம்பித்தானோஅதுதான் பக்தியாக மாறியது.அதையும் நாம் தான் உருவாக்கினோம்.
மதம் என்பது நம்மால் தான் உருவாக்கப்பட்டதே தவிர.எங்கிருந்தும் வரவில்லை.ஆனால் வரலாற்று பதிவுகளில் பார்த்தால் பின்னால் வந்தவைகள் அவைகள் என்று கூறினார்.
ஆர்.பாலகிருஷ்ணன் அய்ஏஎஸ் (ஓய்வு) அவர்கள் பார்வையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது – கிடைக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ஹரப்பா பண்பாட்டில் கிடைத்துள்ள சுடுமண் உருவங்களில் 10 க்கு 7 அல்லது 8 பெண் உருவங்களாக இருக்கின்றன.
மேலும் நடன மங்கை என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பெண் உருவமும் கிடைத்துள்ளது.அதிகமான அளவுக்கு பெண் உருவங்கள் கிடைத்திருப்பதை நாம் குறிப்பாக சொல்லலாம்.அங்கு நம்பிக்கைக்கு இடம் இருந்து இருக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது – இருந்திருக்கலாம். மதம் என்ற கருத்து அங்கு மய்யமாக இருக்கவில்லை.
சிந்துவெளி பண்பாட்டில் குப்பைத்தொட்டி இருந்தது.தெரு நன்றாக இருந்தது.குளிப்பதற்கு இடம் இருந்தது.ஆனால் கடவுள் நம்பிக்கை இருந்த போதிலும் கடவுளுக்கென்று மய்யமான இடம் இருக்கவில்லை.
கீழடியைப் பார்த்தால்அங்கும் உருவங்கள் கிடைக்கின்றன விளையாட்டுப் பொருட்கள் கிடைக்கின்றன.ஆனால் மதம் சார்ந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்களில் கூட கடவுள் இருந்தது. ஆனால் கடவுள் மய்யப்படுத்தப்பட வில்லை.தமிழ்ப் பண்பாட்டில் கடவுள் Creator ஆக இருக்கவில்லை. கருப்பொருளில் 14 பட்டியலிடப்பட்ட பொருட்களில் கடவுள் ஒன்றாக இருந்தது. கடவுள் தமிழ் உலகத்தை படைக்கவில்லை என்று கூறினார்.
– மா. அழகிரிசாமி, தலைவர், ப.க. ஊடகப்பிரிவு.