சமகால சமூகத்தில் காணப்படும் சிந்துவெளி நாகரிகத் தொடர்புகள் – நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு

viduthalai
5 Min Read

சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நிறைவு பெற்றது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்து ஆய்வு மய்யமும் இணைந்து இந்த பன்னாட்டு கருத்தரங்கை ஒருங்கிணைத்து ஜனவரி 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் நடத்தின.

கடந்த நூறு ஆண்டுகளில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் எண்ணற்ற சிந்துவெளி நாகரிகம் தொடர்பான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை ஒட்டி சிந்துவெளி சார்ந்த புரிதலை ஆழமாக்க வேண்டியது அறிவுலகின் கடமை. சர் ஜான் மார்ஷல் குறித்தும் அவரது பங்களிப்புகள் குறித்தும் ஆய்வுகள் அதிகம் வெளிவராத நிலையில், அதனை ஆராய்தல் சிந்து வெளி எழுத்துக்களை பற்றியும் அதன் விளக்கங்கள் சார்ந்தும் பல ஆராய்ச்சிகள் செய்தல் பண்டைய மரபார்ந்த அடையாளங்களைக் கொண்டு தனித்துவமான கருத்தாக்கங்களை உண்டாக்குதல், சிந்துவெளியை புரிந்து கொள்வதற்கான நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துதல், சிந்துவெளியின் பொருள் சார் பண்பாட்டை ஆராய்தல் முதலியவற்றின் மூலம் சிந்துவெளி நாகரிகம் குறித்து இன்னும் தெளிவான புரிதலை உண்டாக்க முடியும்.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்க பெறும் பானை ஓடுகளில் உள்ள கீறல்கள் சிந்துவெளி வரி வடிவங்களோடு ஒப்பீட்டு அளவில் ஒன்றாக இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டும் ,இந்த கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கண்ணோட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலமும் பல்துறை சார்ந்த உரையாடலை வளர்ப்பதன் மூலமும், சிந்துவெளி நாகரிகம் பற்றிய நமது புரிதலையும் சமகால சமூகத்தில் காணப்படும் அதன் நீண்ட தொடர்பையும் தெளிவாக்குவதே இந்த கருத்தரங்கின் மய்ய நோக்கமாகும். இந்த பன்னாட்டு கருத்தரங்கு அறிஞர்கள் தொல்லியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், ஆர்வலர்கள், முதலியோரையும் சமீபத்திய அகழாய்வுகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உள்ளிட்டவற்றையும் ஒருங்கிணைத்து சிந்துவெளிப் பண்பாட்டை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்களை தீர்த்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு இக்கருத்தரங்கம் வழிவகை செய்திருக்கிறது என்று சொல்லலாம்.

கருத்தரங்கின் முதல் நாளில் (5.1.2025) வரலாற்றாசிரியர் பேராசிரியர் ரொமிலா தாப்பர் இணைய வழியாக கருத்துரை வழங்கினார். அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நயன் ஜோத் லஹரி சிந்துவெளி நாகரிகம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பினை திரும்பி பார்த்தல் என்ற தலைப்பிலும்,

ஹரப்பா.காம் நிறுவனர் ஓமர் கான் ஹரப்பா.காம் @30 என்ற தலைப்பிலும், ஷிவ் நாடார் கல்வி நிறுவனத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுடேஷ்னா குகா, 100 ஆண்டுகளுக்கு முன் ஹரப்பா என்ற தலைப்பிலும், இங்கிலாந்து, டர்காம் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் கிரிஸ்டோ பர் டேவிஸ், மார்ஷல் மீதான புத்தொளி: சர் ஜான் மார்ஷல் அவர்களின் தொல்லியல் அணுகுமுறைகளை ஆராய்தல் என்ற தலைப்பிலும்,

வரலாற்று எழுத்தாளர் டோனி ஜோசப், “ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிப்பு 100 ஆண்டுகளுக்கு பிறகும் நிலவும் சில கேள்விகளும் சிக்கல்களும்” என்ற தலைப்பிலும்,

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கடல் சார்ந்த தொல்லியல் துறை இணை பேராசிரியர் முனைவர் வி.செல்வகுமார், “அரப்பன் இந்தியா: இந்திய துணை கண்டத்தில் சமகாலத்திய கலாச்சாரங்கள்” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மதிப்புறு ஆலோசகர் பேராசிரியர் முனைவர் ராஜன் சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டு குறியீடுகளும் ஓர் ஒப்பிட்டு ஆய்வு என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள்.

ஜனவரி 6ஆம் நாள் நடந்த இரண்டாம் நாள் நிகழ்வில் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கிரெக் ஜேமிசன், “சிந்து பண்பாட்டின் முத்திரைகள்: நடப்பு பார்வைகள் மற்றும் எதிர்கால இலக்குகள்” என்ற தலைப்பிலும், அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவி டில்ஷாட் பாத்திமா மணி தயாரித்தல் சிந்துவெளி பண்பாட்டின் கலாச்சார அடையாளம் என்ற தலைப்பிலும், அய்தராபாத் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலறிஞர் முனைவர் கே.தங்கராஜ், “இந்திய மக்கள் உருவாக்கம்: சிந்துவெளி மற்றும் மரபணு பார்வையில்” என்ற தலைப்பிலும், மதுரை காமராஜ் பல்கலைக்கழக மரபியல் துறை தலைவர் முனைவர் ஜி.குமரேசன், “தென்னிந்திய மனித மரபியல் வரலாறு: அய்ந்து மூதாய இனங்களை காட்டும் நவீன மரபணு தொகுப்புகள்” என்ற தலைப்பிலும், இரண்டாம் நாள் பிற்பகல் அமர்வில் காந்திநகர் அய்அய்டி இணை பேராசிரியர் முனைவர் அலோக்குமார் கண்ணுங்கோ பகத்ராவ் மற்றும் அதன் நடப்பியல் பயன்பாடு என்ற தலைப்பிலும்,

புதுடில்லி இந்திய தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் முனைவர் ஆர்.என். குமரன், “சிந்துவெளிப் பண்பாடும் தென்னிந்தியாவில் அதன் பொருள் கலாச்சாரமும்” என்ற தலைப்பிலும், திருவனந்தபுரம் கேரளா பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜேஷ், “கட்ச் பகுதியில் ஹரப்பன் தொல்லியல் கண்டுபிடிப்புகள்” என்ற தலைப்பிலும்,
தமிழ்நாட்டு தொல்லியல் துறை மேனாள் துணை கண்காணிப்பாளர் முனைவர் மார்க்சிய காந்தி, “வேதங்களில் காணப்படும் சிந்து வெளி கலாச்சார எச்சங்கள்” என்ற தலைப்பிலும்,

3ஆம் நாள் (ஜனவரி 7ஆம் நாள்) கருத்தரங்கின் முற்பகல் அமர்வில் கனடா, டோரண்டோ பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் முனைவர் பிரண்டா இ.எப். பெக்,

“சிந்துவெளியிலும், கொங்கு நாட்டிலும், மெசபடோமியா ஏழு சகோதரிகள் சொல்வது என்ன?” என்ற தலைப்பிலும், கன்னட பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் கே.எம்.மெட்ரே அவர்கள், “ஹம்பி, துங்கபத்ரா நதி பகுதி குகை ஓவியங்களும் சிந்துவெளி முத்திரைகளுடன் காணப்படும் ஒற்றுமைகளும்” என்ற தலைப்பிலும், ரோஜா முத்தையா ஆய்வு நூலக சிந்துவெளி ஆய்வு மய்யத்தின் ஆய்வாளர் முனைவர் ஆர்.பாலகிருஷ்ணன், “இரு மொழி எழுத்துகள் இல்லாத நிலையில் சிந்துவெளி புதிரை புரிந்து கொள்ளுதல்” என்ற தலைப்பிலும்,

புதுடெல்லி இந்திய தொல்லியல் துறை இயக்குநர் முனைவர் கே .அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள்,

“கீழடி அகழாய்வு நோக்கில் சிந்துவெளி பண்பாடும் திராவிட கலாச்சார தொடர்ச்சியில் அதன் தாக்கமும்” என்ற தலைப்பிலும்,
மொகாலி மாணவர் அணிஸ் பரத்வாஜ் லட்சுமணன், “சிந்துவெளி எழுத்தில் சில புதிய துப்புகள்” என்ற தலைப்பிலும்,
சென்னை ஆய்வாளர் சுகுமார் ராஜகோபால், “சிந்துவெளியில் வானவியல்” என்ற தலைப்பிலும்,

சென்னை கணக்கியல் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் சித்தாபாரா சின்ஹா, ”சிந்துவெளி எழுத்து மற்றும் தரவுகளை வாசிக்க புதிய அணுகுமுறை” என்ற தலைப்பிலும்,

வங்காள ஆய்வாளர் பஹாட்டா அன்சுமாலி அவர்கள், “சிந்து வெளி மணி வர்த்தகம், மீன் குறியீடும், திராவிட மூதாதைய மொழி குறியீடுகளும்” என்ற தலைப்பிலும்,

நொய்டா, இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் டி.அருண் ராஜ் அவர்கள், ”இரு மொழி எழுத்துக்கள் கிடைக்காத நிலையில் சிந்துவெளி எழுத்துகளை வாசிப்பது” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள்.
கருத்துரையாளர்கள் ஒவ்வொருவரும் பேசி முடித்த பிறகு பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை அளித்தார்கள். நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் தொல்லியல் துறையின் செயலாளர் உதயசந்திரன் அவர்கள் கலந்து கொள்ளலுடன் நிறைவு விழா நடைபெற்றது.

கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *