கொழும்பு, ஜன.12- இலங்கையில் இஸ்லாத்தை அவமானமாக பேசியதற்காகவும் மதவெறுப்பை தூண்டியதற்காகவும் புத்த துறவிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மூத்த புத்த துறவியும் சிங்கலீஸ் புத்திஸ்த் நேஷனல் கட்சி தலைவருமான கலகோடாட்டே ஞானசறா, கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இஸ்லாமிய மதம் குறித்து தகாத வார்த்தைகளை பேசி, வெறுப்புணர்வை தூண்டினார். இதற்காக, கடந்த 2024 டிசம்பரில் அவர் கைது செய்யப்பட்டார்.
எச்சரிக்கை
இந்நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் 9.1.2025 அன்று அவருக்கு 9 மாதம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. மேலும், அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,130.45 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையைக் கட்டவில்லை என்றால் சிறைத் தண்டனையில் மேலும் 1 மாதம் அதிகரிக்கக் கூடும் என அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்டனையை உறுதி செய்தது
இதனைத் தொடர்ந்து, அவர் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்தார் அதனை ரத்து செய்த நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்தது.
அரிதான சிறைத் தண்டனை
இலங்கையில் பெருவாரியான மக்கள் புத்த மதத்தை பின்பற்றப்படுவதினால் பெரும்பாலும் குற்றம்சாட்டப்பட்ட புத்த துறவிகளுக்கு தண்டனைகள் அரிதாகத்தான் வழங்கப்படும். இருப்பினும், கலகோடாட்டே ஞானசறா இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பியதற்கு தற்போது இரண்டாவது முறையாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஒருவரின் மனைவியை மிரட்டியதற்காகவும் நீதிமன்ற அவமதிப்பிற்காகவும் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, அதில் அவர் வெறும் 9 மாதங்கள் மட்டுமே சிறையில் கழித்தார். அதற்குள் அப்போதைய இலங்கை அதிபராக இருந்த மைத்ரிபலா சிறிசேனா அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார்.
மேலும், இலங்கையின் மேனாள் அதிபர் கோட்டபயா ராஜபக்சேவின் நெருங்கிய தொடர்புடைய கலகோடாட்டே ஞானசறா அவரது ஆட்சியின் கீழ் சிங்கலீஸ் புத்திஸ்த் நேஷனல் கட்சியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டு மத ஒற்றுமையை பாதுகாக்கும் சட்டப்பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.