அலகாபாத், ஜன.9- உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக ஜாமின் மனு ஒன்று விசாரணையில் உள்ளது. 4 ஆண்டுகளாக ஜாமின் மனு விசாரணையில் இருப்பதாக அறிந்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
4 ஆண்டுகளாக விசாரணை
உத்தரப் பிரதேச காவல் துறையினர் கொலை வழக்கு தொடர்பாக இம்ரான் என்பவரை கடந்த 2018இல் கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாமினில் விடுவிக்கக் கோரி இம்ரான் தாக்கல் செய்த மனுக்கள் உ.பி. நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது 4 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது.
இதையடுத்து இம்ரான் தரப்பில் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் தாக்கல் செய்த மனுவை 16 முறை ஒத்திவைத்ததாக உச்சநீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணையின் போது, இம்ரானை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்குரைஞர் முகமது அனஸ் சவுத்ரி வாதிட்டார். இம்ரானுடன் சேர்த்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் வாதம் செய்துள்ளார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.