கொச்சி,ஜன.9- ‘பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது, பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்’ என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
கேரள மின்சார வாரியத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், அங்கு ஏற்கெனவே பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மீது காவல் துறையில் பாலியல் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு
அதில், ‘கடந்த 2013 முதல் மோசமான வார்த்தைகளை கூறி, மேனாள் ஊழியர் என் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார்.
‘பின், 2016 – 17இல் அலைபேசியில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை தந்தார்’ என, தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அந்த நபர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மேனாள் ஊழியர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 6.1.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேனாள் ஊழியர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘ஒரு பெண்ணின் அழகை விமர்சிப்பது, அய்.பி.சி., பிரிவு 154 ஏ மற்றும் 509இன்படி சட்டப்படி குற்றமாகாது. இது, பாலியல் ரீதியான விமர்சனமாகக் கருத முடியாது’ என வாதிட்டார். ரத்து செய்ய முடியாது
பெண் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர், ‘தவறான நோக்கத்திலேயே பெண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘ஒரு பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது, பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்.
‘இந்த வழக்கின் உண்மைத் தன்மையை பார்க்கும்போது, பெண்ணுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் பாலியல் ரீதியாக இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.