சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (3)

Viduthalai
7 Min Read

கவிஞர் கலி.பூங்குன்றன்

எங்களின் கதி இதே கதிதானா?
சுயமரியாதை வீரர்காள், எங்களைக் காப்பாற்ற வந்த பெரியீர்காள்!
ராமநாதபுரம் ஜில்லா, திருவாடானைப் போஸ்டு, அஞ்சுகோட்டை கிராமவாசிகளாகிய தாழ்த்தப்பட்ட நாங்கள் படும் பாட்டைக் கவனித்தும் இன்னும் உங்களுக்கு மனம் வரவில்லையோ! எங்கள் தலைமைக்காரர்களாகிய பத்திரிகை படிக்கத் தெரியாத தலைமைக்காரர்கள் அவர்கள் நினைத்ததே சட்டமென வைத்துக் கொண்டு எங்களைப் படுத்தும் கொடுமைகளைச் சொல்லவும் வேண்டுமோ! ஏதோ எங்கள் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த பொருள்களைக் கூட நாங்கள் அனுபவிக்க முடியாமல் மலாய் நாடு சென்று ஒழிந்து கிடக்கின்றோமே! தாய் நாடு திரும்பப் பயமாயிருக்கிறதே, அப்படி ஒருவர் இருவர் (தலை மயிர் கிராப் வைத்துள்ளவர், அல்லது கொஞ்சம் பணம் உள்ளவர்) திரும்பினாலும் அவர் அங்கு பனை மரத்தில் கட்டப்பட்டு வாங்கும் சவுக்கடி எங்களை மலாய் நாட்டை தாய் நாடாய் வைத்துக் கொள்ளச் செய்து விடுகிறதே! இதைக் கவனிப்பதற்கொருவருமில்லையே! இவைகள் இத்துடனிருக்க காருண்யம் நிறைந்த கவர்ன்மெண்டாரால் பொட்டக்கோட்டை என்னும் ஊரில் ஒரு இலவசப் பாடசாலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் நடக்கும் கொடுமைகளையாவது அக்கிராம கல்வி இலாகா ஆபீசர் கவனிப்பதாகத் தெரியவில்லை. ஆகையால், சுயமரியாதை வீரர்காள்! எங்களின் கதி இதே கதி தானா? அல்லது நாங்கள் எங்கள் தாய்நாட்டை அடைந்து எங்களுடைய ஆஸ்திகளை அனுபவிக்கும்படியாய், (எங்களைக் காப்பாற்ற வந்தவர்களாகிய) நீங்கள் எங்களுக்கு விமோசனம் அளிப்பீர்களா?
இங்ஙனம்,
“பயந்தோடி”
(‘குடிஅரசு’ 26.04.1931)

சுயமரியாதை இயக்கமும், அதன் வீரர்களும் எத்தகைய எதிர்பார்ப்புக்குரிய தொண்டர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
1929இல் செங்கற்பட்டிலும் 1930இல் ஈரோட்டிலும் 1931இல் விருதுநகரிலும் நடத்தப்பட்ட மாநில சுயமரி யாதை மாநாடுகள் சமுதாய வரலாற்றுப் போக்கில் அதிரடித் திருப்பங்களைத் தரும் புரட்சிகரத் தீர்மானங்களை நிறைவேற்றின. அதற்குமுன் மக்கள் கேட்டறியாத, நினைத்தறியாத முற்போக்குச் சிந்தனைகள் எரிமலையாக வெடித்துக் கிளம்பின.
ஜாதி ஒழிக, தீண்டாமை ஒழிக, மதம் ஒழிக, வேதம் ஒழிக, சாஸ்திரம் ஒழிக, புராணங்கள் ஒழிக என்ற குரல்கள் கிளம்பின.
ஜாதிப் பட்டங்களை அது தாங்கிச் சுமந்தவர்கள் அம்மாநாட்டிலேயே தூக்கி எறிந்தனர்.
செங்கற்பட்டு மாநாட்டில் சமையல் செய்பவர்கள் நாடார்கள்; மாநாட்டில் எல்லோரும் சேர்ந்து உண்ண உடன்படுவோரே மாநாட்டுப் பிரதிநிதிகளாக வரலாம் என்று முன்னறிவிப்புக் கொடுக்கப்பட்டது.
95 ஆண்டுகளுக்கு முன் இவை எல்லாம் எவ்வளவுப் பெரிய அணுகுண்டு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
1931 ஆகஸ்டில் விருதுநகரில் நடை பெற்ற மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது:
“மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால், அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மாநாடு கருதுகிறது.”

ஈரோட்டில் (12.05.1930) நடைபெற்ற சுயமரியாதை இளைஞர் மாநாட்டின் ஒரு தீர்மானம் கூறுகிறது. “எந்தப் பொதுக்கூட்டங்களிலும், தொடக்கத்திலுமாவது முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவைகள் செய்யும் செயலை விட்டுவிட வேண்டும்”. இதுபோல் எத்தனை எத்தனையோ!
மதவாதம் ஆபத்தானது அது வேரோடு வீழ்த்தப்பட வேண்டும் என்று இன்று குரல் கொடுக்கப்படுகிறது.
95 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவுத் தொலைநோக் கோடு இதுபற்றிச் சிந்திக்கப்பட்டது என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சமதர்மக் கோட்பாடு!
தன்மான இயக்க வரலாற்றில் சமதர்மத்துக்கு முக்கியமான இடம் உண்டு. தந்தை பெரியார் அவர்கள் சோவியத்து ஒன்றியம் சென்று வந்த பிறகே சமதர்மச் சிந்தனைகள் பால் அவர்தம் எண்ணம் ஈடுபட்டது என்பது தவறானதாகும்.
1930 மே 10,11 ஆகிய நாள்களில் ஈரோட்டில் சுயமரியாதை இயக்க இரண்டாவது மாகாண மாநாடு நடைபெற்றது, அம்மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய நன்றி உரையில் அவர்தம் சமதர்மச் சிந்தனைப் பொறி வெளிப்பட்டது.
“பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதையும் தங்களது சுகபோக வாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கிற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும்” என்றார்.
தந்தை பெரியார் சோவியத்து ஒன்றியம் உட்பட மேல் நாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நாள் 1931 டிசம்பர் 13.
அதற்கு முன்னதாகவே அவர்தம் சுயசிந்தனையில் பொதுவுடைமை, பொதுவுரிமைச் சித்தாந்தங்கள் அரும்பி மணம் வீசத் தலைப்பட்டன.

விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம்
1931 ஆகஸ்டில் நடைபெற்ற விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் என்ன கூறுகிறது?
“சமதர்மத் தத்துவமும், பொதுவுடைமைக் கொள்கையும் நாட்டில் ஓங்க வேண்டும் என்பதே நமது இலட்சியமாயிருக்கிறபடியால் விதி. கடவுள் செயல் என்பன போன்ற உணர்ச்சிகள் மக்கள் மனதிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.”
1847இல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை (Communist Manifesto) தமிழில் மொழியாக்கம் செய்து ‘குடிஅரசு’ (04.10.1931) இதழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். அந்த அறிக்கையை வெளியிட்டு விட்டு, அதுபற்றிய தம் கருத்தினையும் ஒரு குறிப்புரையாகத் தந்தார்கள்.

அது ஒரு சிறந்த பாயிரமாகும்!
நியாயப்படி பார்த்தால் சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷ்ய தேசத்தைவிட, இந்தியாவிற்கே முதன்முதலில் ஏற்பட்டிருக்க வேண்டியதாகும். ஆனால், அந்தப்படி ஏற்படாமல் இருப்பதற்கு இங்கே அநேக வித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும், சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு, உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு வழியில்லாமல், காட்டுமிராண்டித் தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது – அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும் அதே சூழ்ச்சிக்காரர்கள் வேற்றரசர்களை அழைத்து வந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கியாளச் செய்து வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, ரஷ்யாவிற்கு முதலிடம் ஏற்பட வேண்டியதாயிற்று” என்று ஓர் ஆய்வுரையை முகவுரையாக ஆக்கித் தந்தார்.
1931 விருதுநகர் வாலிபர் மாநாடும் இதனைத்தான் – வர்ணாசிரமத்திலும், கடவுள் செயல் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கிற யாராலும் மக்களுக்குச் சமத்துவமும் விடுதலையும் அடையும்படிச் செய்ய முடியாது என்கிற தீர்மானத்தின் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் தன்மான இயக்கத் தோழர்களுக்கும் இதில் ஏற்பட்ட இடைவெளி – இன்றைய தினம் நல்ல அளவு நீக்கப்பட்டு இருப்பது திருப்பம் தரும் வரவேற்புக்குரிய சிந்தனையாகும்.

ஈரோடு சமதர்மத் திட்டம்
13.12.1931இல் மேனாட்டுச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய தந்தை பெரியார் அவர்கள் 1932 நவம்பரில் தாயகம் திரும்பினார்.
தான் ஏற்கனவே கொண்டிருந்த கருத்தின் வழி அரசு ஒன்று சோவியத்து ஒன்றியத்தில் அமைந்திருந்தது அவருக்கு மகிழ்வை அளித்தது. “தோழர்களே! எனது அய்ரோப்பிய யாத்திரையிலோ, குறிப்பாக ரஷிய யாத்திரையிலோ நான் கற்றுக் கொண்டு வரத் தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை. ஆனால், நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும், அக்கொள்கைகளால்தான் உலகமே விடுதலையும், சாந்தியும், சமாதானமும் அடையக் கூடும் என்றும் தெரிந்ததே – இதுதான் உங்களுக்கு அய்ரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என்கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்” என்று விருதுநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் கூறியுள்ளார்.
(‘குடிஅரசு’ 12.03.1933 பக்கம் 7)

1932 டிசம்பர் 28,29 ஆகிய நாள்களிலும் ஈரோட்டில் சுயமரியாதைத் தொண்டர்களைக் கூட்டி ஒரு சமதர்மத் திட்டத்தினை வெளிப்படுத்தினார். சிந்தனைச் சிற்பி ம.சிங்கார வேலர் இதில் முக்கியமாகப் பங்கேற்றார்.
பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்து இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது என்பது முதல் திட்டமாகும்.
(நாட்டுச் சுதந்திரத்துக்கு விரோதமாக இருந்தனர் பெரியாரும் அவர்தம் இயக்கத்தினரும் என்று கூசாது கூறும் நாக்குக்குச் சொந்தக்காரர்கள் கொஞ்சம் சொரணையோடு இந்த இடத்தைப் பார்க்கட்டும்)
தொழிலாளர்களுக்கு ஏழு மணி நேர வேலை, தொழில் இல்லாமல் இருப்பவர்களை சர்க்காரே போஷிக்கும்படிச் செய்தல், எல்லா விவசாய நிலங்களும், காடுகளும், தாவாது சொத்துகளும் எந்தவிதப் பிரதிப் பிரயோசனமும் கொடுபடாமல் பொது மக்களுக்கு உரிமையாக்குவது உட்பட புரட்சிகரமான திட்டங்கள் வகுக்கப்பட்டன.

9 மாத கடுங்காவல் தண்டனை
இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்? என்று ‘குடிஅரசு’ இதழில் எழுதப்பட்ட தலையங்கம் ராஜ நிந்தனை, பொதுவுடைமைப் பிரச்சாரம் என்று கூறப்பட்டு, தந்தை பெரியாரின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு 9 மாத கடுங்காவல் தண்டனையும், 300 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
‘குடிஅரசு’ இதழின் பதிப்பாளர் என்கிற முறையில் தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் (6 மாதம் கடுங்காவல்; 300 ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை!).

பகுத்தறிவு
‘குடிஅரசு’ இதழுக்கு வெள்ளைக்கார அரசால் காப்புப் பணம் கேட்கப்பட்டது. கட்ட மறுக்கவே இதழ் நிறுத்தப்பட்டது, உடனே ‘புரட்சி’ இதழைத் துவக்கினார்; அதுவும் அடக்கு முறைக்கு ஆளானது; ‘பகுத்தறிவு’ இதழைத் துவக்கினார்.
‘பகுத்தறிவு’ இதழ் அலுவலகம் சோதனையிடப்பட்டது. (20.01.1935). தோழர் ஜீவானந்தம் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற தோழர் பகத்சிங்கின் நூல் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீட்டாளர் என்ற முறையில் தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி, நூலாசிரியர்
ப.ஜீவானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டனர்.

– தொடரும்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *