சென்னை, ஜன.6 தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சக்தி சேனா மகளிர் அமைப்பின் சேலம் மாவட்ட மாநாடு சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
3 குழந்தைகள்
தமிழ்நாடு நாயன்மார்கள் வாழ்ந்த பூமி. இங்கு பிறந்ததற்கு ‘புண்ணியம்’ செய்து இருக்கிறோம். இந்துக்களில் பல்வேறு பிரிவுகள், கடவுள் கும்பிடுவதில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச பேருந்து பயணம் கொடுத்துவிட்டால் போதுமா? ரூ.1,000-த்தில் குடும்பம் நடத்த முடியுமா? உரிமை, வாழ்வாதாரங்கள் காக்க டாஸ்மாக் கடையை ஒழிக்க பெண்கள் போராட வேண்டும். இந்தியாவை இந்துக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் இந்துக்கள் அதிகம் இருக்க வேண்டும். எனவே குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் இதேமக்கள் தொகை நீடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
மோசடி அழைப்புகளை தடுக்க சோதனை திட்டம் : டிராய்
புதுடில்லி, டிச.6 பொதுமக்களின் கைப்பேசி களுக்கு வருகின்ற மோசடி அழைப்புகளை தடுப்பதற்கான சோதனை திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
தற்போது பயனாளா்களின் கைப்பேசிக்கு வருகின்ற வா்த்தக அழைப்புகள் குறித்த தகவல்களை ‘பகிர்ந்தளிக்கப்பட்ட பேரேட்டுப் பதிவு தொழில்நுட்பத்துக்கு’ (டிஸ்டிரிபியுடெட் லெட்ஜா் தொழில்நுட்பம்) மாற்றம் செய்யப்படவுள்ளது என டிராய் தலைவா் அனில் குமார் லஹோதி தெரிவித்தார்.
சீர்திருத்தம்
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அமைப்பின் தகவல் தொழில்நுட்ப முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள டிராய் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பு டெலாய்ட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் பரிந்துரை அறிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு வேறொரு அமைப்பிடம் வழங்கப்படும். அதனடிப்படையில் நிகழாண்டு இறுதிக்குள் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
தற்போது தங்களுக்கு தெரியாத ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் இருந்து வரும் கைப்பேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை மோசடி அழைப்புகள் என பொதுமக்கள் புகார் செய்கின்றனா். ஆனால் அதை அந்நிறுவனம் மறுக்கிறது. புகாரளித்த சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா் அவரது தகவல்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார் என அந்நிறுவனம் கூறுகிறது.
எனவே, பொதுமக்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதற்கு அனுமதி வழங்கியது குறித்த தகவல்களை டிஸ்டிரிபியுடெட் லெட்ஜா் தொழில்நுட்பத்துக்கு (டிஎல்டி) மாற்ற முடிவுசெய்துள்ளோம். இதன்மூலம், அனுமதி யில்லாமல் பெறப்படுகின்ற தொலைபேசி அழைப்புகளை விரைவில் தடுத்து நிறுத்த முடியும்.
இருப்பினும், வாடிக்கையாளா்கள் ஏற்கெனவே வழங்கிய அனுமதி சார்ந்த தகவல்கள் மற்றும் அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவது குறித்த நடைமுறையை உருவாக்குவது மிகவும் சவாலானது. இதை கண்டறிந்து செயல் படுத்துவதற்கான சோதனைத் திட்டம் இம்மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இதுதவிர மோசடி அழைப்புகளை கட்டுப் படுத்துவதற்கான புதிய கடுமையான விதிமுறைகளும் இந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
டிஸ்டிரிபியூடெட் லெட்ஜர்
தொழில்நுட்பம் என்றால் என்ன?
பல்வேறு பகுதிகள் அல்லது இடங்களில் இணைய தரவுகளை சேகரிப்பது அல்லது பதிவு செய்வதே டிஎல்டி எனப்படுகிறது. பணப் பரிவா்த்தனைகள் உள்பட பல்வேறு தரவுகள் இதில் சேகரிக்கப்படுகின்றன. பொதுவாக ஒரு மய்யப் பகுதியில் இருந்து கட்டுப்படுத்தப்படும் தரவுகள் கசிவதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையில், பலதரப்பினராலும் அல்லது குறிப்பிட்ட வலைப்பின்னலுக்குள் மட்டுமே டிஎல்டி கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தரவுகள் கசிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இது தரவுகளை பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.