புராண, இதிகாச பேச்சாளரும், தீவிர ஸநாதனவாதி யுமான டாக்டர் சுதா சேஷய்யனை செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தலைவராக்குவது தமிழ் வளர்ச்சிக்கோ, நல்ல ஆய்வுகளுக்கோ உதவாது. ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் ஸநாதன கருத்தியலுக்கு இசைவான ஆராய்ச்சிகளை செய்து மொழி வளர்ச்சிக்கே முட்டுக் கட்டையாகிவிடுவார் என்றேன்; தற்போது அது தான் நடந்துள்ளது. அகத்தியருக்கு விழாவாம்! அதை செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் கொண்டாடுமாம். அவர் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஒன்றிய அரசு பல கோடிகள் தருகிறதாம்! நம் மீது எதையாவது திணித்து தங்கள் ஸநாதன நோக்கத்தை நிறைவேற்ற விரும்பும் போது அதற்கு ஒரு ஆன்மீக ரிஷியை கற்பனையில் சிருஷ்டித்து வரலாற்றில் பதிந்து விடுவர்!
ஏழு சப்த ரிஷிகளில் ஒருவராக அகத்தியரை சொருகுகின்றனர். சித்த மருத்துவத்தை வளர்த்தெடுத்த பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் அகத்தியரை சொருகுகின்றனர்.
ரிக் வேதத்தில் இருக்கும் பாட்டையும் இவர் எழுதியுள்ளாராம்! நமது பெயர் தெரியாத சித்தர்கள் பலர் எழுதி வைத்த சித்த மருத்துவக் குறிப்புகளுக்கும் அகத்தியரை உரிமையாளராக்கிவிட்டார்கள். அவ்வளவு ஏன்? அந்த ஆதிசிவன் கல்யாணத்தின் போதும் இவர் இருந்ததாகவும், சிவன் கல்யாணத்தைக் காண அனைவரும் வட இந்தியா நோக்கி பயணப்பட்டுவிட்டதால், பூமி தென் திசையில் சமன் குறைந்து கீழே போய்விடும் என்பதால், அதைச் சமன் செய்ய அகத்தியரை தென் திசைக்கு அனுப்பியதாக கதைவிட்டுள்ளனர்.
இவை எல்லாவற்றிலும் கொடுமை என்னவென்றால், தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவரும் அகத்தியரே என அவருக்கு மொழி அறிஞர் என்ற அத்தாரிட்டியும் தந்துள்ளனர் இந்த ஸநாதனிகள்!
தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவரே அகத்தியர் என பல காலம் நம்மை நம்ப வைத்து இருந்ததால், நமது மகாகவி பாரதியாரும் நம்பி போகிற போக்கில்,
ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்தான். எனப் பாடியுள்ளார்.
தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவர் தொல் காப்பியர். அவர் உருவாக்கிய பாயிரத்தில் அகத்தியர் பெயர் இல்லை. நல்ல வேளையாக இது வரை அப்படி சொருகும் முயற்சியை யாரும் செய்யவில்லை. பாரதியார் பாடலின் மூலமாக அகத்தியர் என்ற கற்பனை கதாபாத்திரம் பார்ப்பனர் என்பதும், வட இந்தியாவின் ஆரிய மைந்தன் என்பதும் தெரிய வருவதால், இவர்களின் ஸநாதனக் கருத்தாக்கத்தை காலந்தோறும் வலிமைப்படுத்த அகத்தியரை கருவியாக்கி உள்ளனர் என நாம் தெளிவு பெறலாம். தொல்காப்பியத்திலோ, சங்க நூல்களிலோ இந்த அகத்தியர் என்ற பெயரே இல்லை. அய்ந்தாம் நூற்றாண்டுகள் முன்பு வரை அகத்தியர் என்ற சொல்லாடலே இல்லை. ஆனால், பிற்காலத்தில் தமிழ், சித்த மருத்துவம், வேதம், புராணங்கள்.. எல்லாவற்றிலும் நீக்கமற நிறைக்கப்பட்டுள்ளார். ஆனால், நவீன அறிவியல் யுகத்திலும் ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருக்கிற காரணத்தால் அறிவியல் மொழியான தமிழை மீண்டும் புராண குப்பைக்கு கொண்டு போக திட்டமிடுகிறார்கள்! தமிழ்ச் சமூகத்தை இளித்தவாயர்கள் என உறுதியாக நம்புபவர்களே இதை செய்யத் துணிந்துள்ளனர்.
இதை நாம் அனுமதிக்கக் கூடாது.
– சாவித்திரி கண்ணன்