சென்னை, டிச.28- தமிழ்நாட்டில் மகப்பேறு உயிரிழப்பு கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு குறைந்து உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
மகப்பேறு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மகப்பேறுகள் நடந்து வருகிறது. மகப்பேற்றிற்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் நடப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மகப்பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பை தடுக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணியை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உயிரிழப்பு குறைவு
கர்ப்பிணி பெண்களுக்கு வழக்கமான மகப்பேறு பரிசோதனைகள், தாயின் ஆரோக்கியத்தைக் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாய் இறப்புக்களுக்கான உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால நீரிழிவு முக்கிய காரணிகளாக உள்ளது. மேலும், தாயின் கடந்த கால சிகிச்சை முறைகள், இதய நோய், ரத்தசோகை போன்ற ஆபத்துக்காரணிகள் கண்டறியப்பட்டு அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, ரத்தம் ஏற்றுதல் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை உள்ளிட்டவைகள் தேவைப்படும் பட்சத்தில் அருகில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. 100 விழுக்காடு பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை மகப்பேறு உயிரிழப்பு 47.29 விழுக்காடாக இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு 17 விழுக்காடு குறைந்து, 39.46 விழுக்காடாக பதிவாகி உள்ளது.
மகப்பேறு காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், பிரசவத்திற்கு முன் பல்வேறு ெதாடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரசவ மய்யங்களில் குழந்தை பிறப்புகள் குறித்து தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் தடையற்ற போக்குவரத்து சேவையை வழங்குவதால், போக்குவரத்து காலத்தில் ஏற்படும் ஆபத்துகள் தவிர்க்கப்பட்டு வருகிறது.
குழந்தை பிறப்புக்கு முந்தைய திட்டமிடல் என்பது பெரிய அளவில் உதவி புரிந்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டில் விலையுயர்ந்த உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.