மரண பயம் அறியாதவர்

viduthalai
1 Min Read

தன்னுடன் இருப்பவர்கள் யார் மீதும் அவர் கோபம் கொள்வ தில்லை. எனினும் தனது மக்களுக்கு துளியளவு சுதந்திரமேனும் மறுக்கப் படுவதாகத் தெரிந்தால் அதை எதிர்த்து பெரியாரின் உடம்பின் ஒவ்வொரு நாடி நரம்பும் புரட்சி செய்யும்.

மரணம் அவரை அரவணைத்துக் கொண்டிருக்கும்போது கூட அவர் போர் வீரராகவே இருந்தார். வாழ்வின் அந்திம காலம் வரையிலும் அவரது உடல் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது நமக்கெல்லாம் ஒரு புதிர்போல இருக்கும். சாவின் அமைதி தம்மீது பரவிக் கொண்டிருந்த காலத்திலும் நிதானமாக நிற்கும் போர் வீரனைப் போல அவர் காட்சியளித்தார். சாவினை எதிர்த்துப் போராடுவதற்குச் சிறிது அவகாசம் கூட அவருக்கு இல்லை – அப்படி வந்துவிட்டது சாவு. மாரடைப்பின் நம்பிக்கைத் துரோகம் இது தான்.

தமது வாழ்வின் நூறாவது ஆண்டு விழாவை அவர் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது. அந்த வேளையில், இந்த நோயன்றிப் பிறிதொரு நோயாக இருந்தால், அதனைப் போகிற போக்கில் துச்சமெனத் தூக்கி வீசிவிட்டுப் போயிருப்பார்.

பெரியாருக்குச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை மிகவும் சிறியது. எனினும் அது பற்றி என்னளவுக்கு மருத்துவத் துறையிலுள்ள அறுவை மருத்துவர் எவரும் தடுமாறியிருக்க மாட்டார்; மனம் தளர்ந்திருக்க மாட்டார்!

தனது வேதனையையும் சவுகரியக் குறைவையும் பெரியாரளவுக்குப் புகார் கூறாமல் பொறுத்துக்கொண்ட நோயாளியை நான் கண்டதே இல்லை. பெரியாருக்கிருந்த மரியாதைக்கு அவர் எவ்வளவு புகார் கூறியிருக்கலாம். தனது மக்களுக்கான தனது போராட்டத்தில் பெரியாரின் மனம் எதற்கெல்லாமோ வேதனைப்பட்டிருக்கலாம். எனினும் மரணம் பற்றிய பயம் அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை.

– டாக்டர் எச்.எஸ்.பட்
தந்தை பெரியார் பிறந்த நாள்
‘விடுதலை’ மலர் (1974)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *