தந்தை பெரியாரிடம் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள்

2 Min Read

1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் தஞ்சைக்கு வந்த பொழுது, தாசில்தாராகப் பணியாற்றி வந்த ஒரு தமிழ் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, அவருக்கு டெபுட்டி கலெக்டர் பதவி கிடைத்துவிட்டது என்று குழந்தைகளுக்கே உரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் குறிப்பிட்டார். மனதில் எந்த விதமான சலனமும், உற்சாகமும் இல்லாமல் அமைதியாக நான் இருந்ததைக்கண்டு, மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறேன்.

எந்தவித மகிழ்ச்சியும் இல்லாமல் மிக அமைதியாக இருக்கிறீர்களே என்று கேட்டார். “அந்த அதிகாரிக்காகச் சிபாரிசு செய்தீர்கள். ஆனால், பதவி கிடைத்ததும் நன்றி சொல்வதற்குக் கூட வரவில்லை. அத்தகைய அதிகாரிக்குப் பதவி கிடைத்ததும் இப்படி மகிழ்ச்சியுடன் கூத்தாடுகிறீர்களே” என்று சற்று அதிகப் பிரசங்கித்தனமாகக் கூறி விட்டேன்.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்த பின், பெரியார் கூறினார்: “ஒரு தமிழனுக்குப் பதவி கிடைத்தவுடன் நம்மை விட அறிவும், திறமையும் இல்லாத ஒரு தமிழனுக்குப் பதவியா என்று எரிச்சலும், கோபமும் அடையாமல் தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பதவி கிடைத்துள்ளது. இது தமிழ்ச் சமுதாயத்திற்குக் கிடைத்த பெருமை என்று எண்ணி மகிழ்ச்சி அடைவதற்கு மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே மனிதாபிமானம். என்னுடைய வயது உனக்கு வரும்பொழுது அதை நீ உணர்வாய்” என்று கூறினார்.
பெரியார் எனக்குக் கூறிய இந்த விளக்கம் பெற்று அய்ம்பது ஆண்டுகள் கடந்து விட்டன.

ஞாயிறு மலர், தந்தை பெரியார்

பொது வாழ்வில் ஈடுபடுவது என்பது எளிமையான காரியம் அல்ல. அண்ணா கூறியது போல் எதையும் தாங்கும் இதயம் பெற்று இருக்க வேண்டும். எதனையும் எதிர்பார்த்தல் இன்றி யாரிடமும், எதையும் எதிர்பார்க்காமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் பிறருக்குச் செய்யும் உதவிகளை மறந்துவிட்டுப் பிறர் நமக்குச் செய்யும் உதவியை என்றைக்கும் நினைவில் வைத்துக் கொண்டு நன்றி செலுத்த வேண்டும்.

தன்னை முன்னிலைப் படுத்தி விளம்பரம் தேடுவதை விடப் பிறருக்கும் நம்மால் இயன்றவரை உதவி செய்து மகிழ்வதே பயனுள்ள வாழ்க்கையாக அமையும். தன்னலம் கருதாது பிறர் நலம் கருதிப் பணி செய்யப் பெரிய உள்ளம் படைத்திருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியாலும், பயிற்சியாலும் அத்தகைய உள்ளத்தை நாம் பெற முடியும். பிறருக்கு ஏற்படும் புகழ், உயர்வு, பெருமை இவற்றைக் கண்டு மனம் புழுங்காமல் மகிழ்ச்சி அடைய மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்குப் பிறரால் ஏற்படும் சிறுமைகள், துன்பங்கள், குற்றச்சாட்டுகள் இவற்றைப் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும். இதுவே தந்தை பெரியாரிடமிருந்து வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள். இவற்றையே பின்பற்றி வாழ்ந்து வருகிறேன்.

– நீதியரசர் பெ.வேணுகோபால்
தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *