அவசர சிகிச்சைப் பிரிவில் மந்திரம் ஓதி சடங்கு செய்து வேடிக்கை பார்த்திருக்கிறது குஜராத் மாநில அரசு மருத்துவமனை நிர்வாகம்.
குஜராத் மாநில அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மந்திரம் ஓதி நீண்ட நேரம் சடங்கு செய்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. நோயால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது வழக்கம். அவர்களின் உடல்நிலை சீர்கேடு தீவிரமடைந்தால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். ஆனால், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் பூசாரி ஒருவர் மந்திரம் ஓதி சடங்குகள் செய்யப்பட்ட அவலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதி. ஆனால், 18.12.2024 அன்று இணையத்தில் வைரலான காட்சிப் பதிவில், பூசாரி ஒருவர் ஆடம்பர உடையுடன் மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இருந்து அவசர சிகிச்சைப் பிரிவு வரை செல்லும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் மந்திரங்களைச் சத்தமாக உச்சரிக்கும் போது அங்குள்ள மருத்துவப் பணியாளர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மற்ற மற்ற நோயாளிகளும் அவதிக்கு ஆளாகினர். யாரும் சென்று தடுக்கவோ அல்லது அவரை வெளியே அனுப்பவோ முயலவில்லை.
இதைக் கண்டித்தால் நாளை நிர்வாகம் ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தினார்கள் என்று கூறி, பணி நீக்கம் செய்து விடுமோ என்ற அச்சத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் உள்பட அனைவரும் அமைதியாக நின்றனர்.
மேலும், அந்த காட்சிப் பதிவில், மந்திரம் ஓதிய நபரிடம், உங்களால்தான் நோயாளி பிழைத்தார் என்று உறவினர்கள் பாராட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிப் பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், குஜராத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி கூறியதாவது:
“முதல்கட்ட விசாரணையில் நோயாளியின் உறவினர்கள் மாந்திரீகவாதியை அழைத்துச் சென்றனர், உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டை தவறாகப் பயன்படுத்தி அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் அவர் சென்றார். நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க போடப்பட்டிருந்த திரைகளை விலக்கி சடங்குகளை செய்துள்ளனர்.
குறிப்பிட்ட அந்த நோயாளி, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளார். அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார். மாந்திரீகச் சடங்குகளால் அவர் குணமடைந்தார் என்பது அர்த்தமற்றது. சிசிடிவி காட்சிகளை முழுமையாக பரிசோதித்து வருகிறோம். இது 15 முதல் 20 நாள்களுக்கு முன்னதாக நடந்த நிகழ்வாக இருக்கலாம். எதிர்காலத்தில் விதிமீறல்களைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேறெந்த மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க உறுதி செய்யப்படும்” என்றார். இதனிடையே, பல்வேறு மருத்துவமனைகளில் மாந்திரீகச் சடங்குகளை செய்து வீடியோ எடுத்து நோயாளிகளை குணப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாரதீய ஜனதா கட்சி 20 ஆண்டுகளுக்குமேல் ஆளும் குஜராத் மாநிலத்தில் அறிவியலுக்கு எதிராக இதைப் போன்ற அவலக் கூத்துகள் அரங்கேறுவது வெட்கப்படத்தக்கதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளியை வைப்பதன் நோக்கத்தையே குழி தோண்டிப் புதைக்கும் அளவுக்கு ஆன்மிகம், மாந்திரீகம் என்பவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தலை விரித்தாடுகின்றன.
மதவாதத்தையே அரசியலாகக் கொண்டு நடைபோடும் ஒரு நாட்டில் இது போன்ற அறிவியலுக்கு விரோதமான ஆபாசங்கள் ஆட்டம் போடுவதில் ஆச்சரியம் இருக்க முடியாதுதான்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவை நீக்கினாலும் நீக்கி விடுவார்களோ – யார் கண்டது?