அண்ணல் அம்பேத்கரை கேலி செய்யும் உள்துறை அமைச்சர்!

viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச.18 அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவையில் நேற்று (17.12.2024) அரசமைப்பு உருவாக் கப்பட்டு 75 ஆண்டுகள் நிறை வடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.

இதனை கண்டித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சினையாகத்தான் தெரிவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் ஷா கூறுகையில், “இந்தக் கருத்துகள் மிகவும் அருவருப்பானவை. அம்பேத்கர் மீது பாஜக-ஆர்எஸ்எஸ் கொண்டுள்ள வெறுப்பை இது காட்டுகிறது. மக்கள் அவர்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டதால், தற்போது அம்பேத்கர் பெயரைக் கூறுபவர்கள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். இது வெட்கக்கேடானது. இதற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
மல்லிகார்ஜுன கார்கேவின் பதிவில், “உள்துறை அமைச்சர் அம்பேத்கரை அவமதித்ததன் மூலம், பாஜக-ஆர்.எஸ்.எஸ்.வினர் மூவர்ணக் கொடிக்கு எதிரானவர்கள். அவர்களின் முன்னோர்கள் அசோக சக்ராவை எதிர்த்தார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு, அம்பேத்கர் கடவுளைவிடவும் குறைவானவர் இல்லை. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழைகளின் தூதுவர் அம்பேத்கர் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அரசின் அமைச்சர்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்த நிலையில், அம்பேத்கரை அமித் ஷா அவமதித்துவிட்டதாக கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, இரு அவைகளிலும் ஜெய் பீம், ஜெய் பீம்.. என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதால் பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *