புதுடில்லி, டிச.18- கையால் மலம் அள்ள தடை மற்றும் அந்த பணி செய்வோரின் மறுவாழ்வு சட்டங்களில் உள்ள முக்கிய வழிமுறைகளை அமல்படுத்தாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனித கழிவுகளை அகற்றும் விவகாரத்தில் கடந்த ஆண்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். குறிப்பாக தொழில் நுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியான முறைகளை பயன்படுத்தவும், கையால் மலம் அள்ளும் முறையை முற்றிலும் ஒழிக்கவும் உத்தர விட்டனர்.
நாடு முழுவதும் மேற்படி தொழிலாளர்களை ஒரு ஆண்டுக்குள் கணக்கெடுக்கவும், அவர்களது குடும்பத்துக்கு பல்வேறு மறுவாழ்வு பணிகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.
கடும் அதிருப்தி
இந்த வழக்கு நீதிபதிகள் சுதான்சு துலியா, அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்படி உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக ஒன்றிய அரசு தாக்கல் செய்திருந்த நிலை அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
இதில் உத்தரவுகள் முழுமையாக செயல்படுத்தாதை கண்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அவர்கள் கூறும்போது, இது மனிதனின் கண்ணியம் தொடர்பான விவகாரம். ஆனால் அரசுக்கு இது குறைந்த முன்னுரிமை கொண்ட துறையாக இருக்கிறது. ஆனால் நாங்கள் அப்படி விடமாட்டோம். எது வந்தாலும், உத்தரவை அமல்படுத்த எந்த எல்லைக்கும் செல்வோம்’ எனக் கூறினர்.