புதுடில்லி, டிச.18 ஒன்றியத்தில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி (அய்முகூ) ஆட்சியில்தான் அதிக சதவீத மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்தார்.
இந்திய அரசமைப்புச்சட்டம் ஏற்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாநிலங்களவையில் நேற்று (17.12.2024) நடைபெற்ற விவாதத்தில் திமுக உறுப்பினர் பி.வில்சன் பேசியதாவது:
17-ஆவது மக்களவையில் 221-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இவற்றில் மூன்றில் ஒரு பங்கு மசோதாக்கள் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான விவாதத்தில் அல்லது விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. மணிப்பூரில் மிக மோசமான இனப்படுகொலைகள் பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை. நிலைக்குழுக்கள் காகிதக் குழுக்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.
17-ஆவது மக்களவையில், 16 சதவீதம் மசோதாக்கள் மட்டுமே விரிவான ஆய்வுக்காக நிலைக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. மாறாக, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின் போது, 71 சதவீதம் மசோதாக்கள் நிலைக் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன என்றார் பி.வில்சன்.