திண்டுக்கல்,டிச.16- தர்மபுரியில் இருந்து ஒரு மருத்துவக் குடும்பத்தினர் 4 மாத கைக்குழந்தையுடன் காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் கூகுள் வரைபடத்தை நம்பி காரை மண் பாதையில் விட்டுள்ளனர். இதில் மழை நேரம் என்பதால் சேறுக்குள் கார் சிக்கிக்கொண்டது. இதன்பின்னர் கைக்குழந்தையுடன் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த அவர்களை தீயணைப்பு படையினர் வந்து மீட்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் பழனிசாமி (வயது 27). இவரது மனைவி கிருத்திகாவும் (27) மருத்துவர் தான். இவர்கள் கைக்குழந்தையுடன் பழனி முருகன் கோவிலுக்கு காரில் கிளம்பியுள்ளனர்.
காரை பழனிசாமி சகோதரர் (25) பாவேந்தர் காரை ஓட்டியுள்ளார். பாவேந்தரும் மருத்துவர் தான். அப்போது பாவேந்தர் கூகுள் வரைபடத்தைப் பார்த்து காரை ஓட்டி வந்துள்ளார். கார் கரூர் – திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வந்துகொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் கார் வேடச்சந்தூர் தம்மனம்பட்டி பகுதியில் உள்ள மேம்பாலத்தை கடந்து வந்துகொண்டிருந்தது.
இதில் கூகுள் வரைபடம் 4 வழிச்சாலையை காண்பிக்காமல், குறுக்கு வழியினை காண்பித்ததாக தெரிகிறது. இதனால் பாவேந்தரும் அந்த மண் சாலையில் காரை திருப்பியுள்ளார். கார் அந்த மண் சாலையில் சென்று கொண்டிருந்தது. மழை நேரம் என்பதால் சேறும் சகதியுமாக இருந்தது. சிறிது தூரம் சென்ற பின்னர் சேற்றில் கார் சிக்கிக்கொண்டது. எவ்வளவு முயற்சித்தும் இருந்த இடத்தை விட்டு கார் நகரவில்லை.
சரி இனி வந்த பாதையிலேயே சென்று விடலாம் என்று நினைத்து காரை பின்னோக்கி இயக்க முயற்சித்தார். ஆனால் அப்போதும் கார் நகரவில்லை. இதையடுத்து பழனிசாமி காரை விட்டு இறங்கி சேற்றில் நின்றபடி காரை தள்ளியுள்ளார். ஆனாலும் காரை நகர்த்த முடியவில்லை. இதனால் காட்டுக்குள் கைக்குழந்தையுடன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தப்படி இருந்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் யாரையும் உதவிக்கும் அழைக்க முடியாத சூழல் இருந்துள்ளது.
இந்த நிலையில் தான் வேறு வழியின்றி சென்னை தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார். பழனிசாமி. நடந்த நிகழ்வு பற்றி கூறியதும், அவர்கள் வேடச்சந்தூர் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சேற்றில் புதைந்த காரை மீட்டனர்.
இதையடுத்து தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்,
கூகுள் வரைபடத்தை நம்பி நடு வழியில் மருத்துவர் குடும்பம் கைக்குழந்தையுடன் சிக்கிக்கொண்டு தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க அரசு ஆலோசனை
சென்னை, டிச.16- ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை.
அதாவது 11 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹீர் ஹுசைன் போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பிய மனுவில், “எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இதற்கு ஆணையர் அளித்த பதிலில், “ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை அரசு பரிசீலித்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.