தந்தை பெரியாரின் அண்ணன்
ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களின் பேரனும்,
ஈ.வெ.கி. சம்பத் – சுலோசனா ஆகியோரின் மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டப் பேரவை உறுப்பினரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (வயது 76) இன்று (14.12.2024) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
சிறிது காலத்திற்கு முன்புதான் அவரின் மகனும், சட்டப் பேரவை உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா. மறைவுற்றார். அந்தக் குடும்பத்துக்கு வேதனைக்கு மேல் வேதனையான அடுத்தடுத்த நிகழ்வுகள் தாங்க முடியாத பெருந்துயரமே!
சமீப காலமாக நம்மோடு மிக அணுக்கமாகவும், நெருக்கமாகவும், நமது கழக நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உணர்ச்சிகரமாக உரையாற்றியும் வந்தார்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். உறுதியான கொள்கை வீரர்; ‘எதிலும் வெட்டு ஒன்று – துண்டு இரண்டு’ என்ற குழப்பமில்லாத கொள்கைக் கனல் அவர்!
அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டுப் பொது வாழ்வுக்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது பாதை மாறாப் பயணம்; எடுத்துக்காட்டானது!
அவரது பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் வாழ்விணையர், மகன் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அருமைத் தோழர் மானமிகு இளங்கோவன் அவர்களுக்கு வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
14.12.2024