புதுடில்லி, டிச. 14- மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்தியா கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 20ஆம் தேதி மகாராட்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன. மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 235 தொகுதிகளை கைப்பற்றிய பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) உத்தவ் சிவசேனா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தன.
எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகை சீட்டுக்கும் இடையே எந்த முரண் பாடும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு இயந் திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்தியா கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்துக்கு பிரசாந்த் ஜெக்தாப் பேசுகையில்; மகாராட்டிரா சட்டப் பேரவை தேர்தலில் தேர்தல் நடைமுறைக்கான விதிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்காக நிலையான ஆபரேட்டிங் விதிகள் மீறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம் நடந்துள்ளது. இதுதொடர்பான தரவுகள் எங்களிடம் உள்ளது. ஒன்றியத்தில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இத்தகைய செயல்கள் நடந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது என்று கூறினார்.