சென்னை, டிச.14 தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (13.12.2024) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான கிறித்தவ தேவாலயங்கள், இசுலாமிய பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைத்தல், பழுதுபார்த்தல் பணி களை மேற்கொள்ள அரசு நிதி உதவி அளித்தல் மற்றும் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம் மற்றும் இசுலாமியர்களுக்கான கபர்ஸ்தான் களுக்கு புதிதாகச் சுற்றுச்சுவர், பாதை அமைத்தல், புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்கும் திட்டங்களின் கீழ் 3 கோடியே 61 லட்சத்து 82 ஆயிரத்து 208 ரூபாய்க்கான காசோலைகளை தேவாலயங்கள் மற்றும் தர்காக்களின் நிர்வாகிகளிடமும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 3.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.
கடன் உதவி
முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் 1999-ஆம் ஆண்டு இந்திய கம்பெனிகள் சட்டம் 1956-இன் கீழ் சிறுபான்மையினரான இசுலாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கி யர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள் மற்றும் ஜெயின் ஆகியோர் நலனுக்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் சிறுபான்மையினருக்கு சிறுவணிகம், வியாபாரம் மேற்கொள்ள குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி வருகிறது. சிறுபான்மையின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இக்கழகம் தனிநபர் காலக்கடன், கைவினை கலைஞர்களுக்கான விரசாத்கடன், சிறுகடன், கல்விக்கடன் போன்ற கடனுதவிகளை வழங்கி வருகிறது. 2024 – 2025 ஆம் ஆண்டில் இக்கழகத்தின் மூலம், ரூ.75.00 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இக்கழகத்தின் மூலம், சுயதொழில் தொடங்கி தனிநபர் கடனாக 2 பயனாளிகளுக்கு 3.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
நன்றி
சிறுபான்மையினர் கல்வி நிறுவ னங்களுக்கு, சிறுபான்மையினர் தகுதிச் சான்றிதழ் தொடர்புடைய துறைகளால் வழங்கப்பட்டு வந்த நிலையில், சான்றிதழ் பெறுவதை எளிதாக்கும் வகையிலும், துரிதமாக வழங்கவும், 2023 ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ், தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரம் அளிக்கப் பெற்ற குழுவின் (Empowered Committee) ஒப்புதல் பெற்று, வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை இக்குழுவால் 6 முறை கூட்டங்கள் நடத்தப் பெற்று 159 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டுள்ளது. அதில் 103 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் தகுதிச் சான்றிதழ் வழங்கபட்டுள்ளது. சிறுபான்மையினர் கல்வி நிறுவன தகுதிச் சான்றிழ்கள் பெற்ற நிறுவனங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் முதலமைச்சரை இன்று சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர், மரு. தாரேஸ் அஹமத், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் முனைவர் சீ.சுரேஷ் குமார், சிறுபான்மையினர் நல இயக்குநர் மு. ஆசியா மரியம், தமிழ்நாடு மாநில சிறுபான்மை யினர் ஆணையத்தின் தலைவர் ஜோ. அருண், தமிழ்நாடு சிறுபான் மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தின் தலைவர்
சி. பெர்னான்டஸ் ரத்தின ராஜா, கிறித்தவ தேவலாயங்களில் பணி புரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் விஜிலா சத்தியானந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.