தமிழ்நாடு முதலமைச்சரும் – கேரள முதலமைச்சரும் இணைந்து நினைவகம்-பெரியார் சிலை- நூலகம் உருவாக்கம் வரலாற்றுச் சாதனைகளே!

Viduthalai
6 Min Read

* தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடந்த ஜாதி – தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் நூற்றாண்டு வெற்றி விழா! (1924-2024)
* சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் காலத்தைக் கடந்து, அடுத்த தலைமுறைக்கும் பாடங்களாக எடுத்துச் சொல்லும்!
* வைக்கம் போராட்டத்தின் வெற்றி அதற்கொரு நற்சாட்சியமாகும்!
இந்தச் சாதனைகளுக்குக் காரணமான அனைவருக்கும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சிமிகு அறிக்கை

ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

ஜாதி, தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டம் வெற்றி பெற்ற நூற்றாண்டையொட்டி, வைக்கத்தில் எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களுக்குக் காரணமாக இருந்த தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கும், முதலமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:
நூறாண்டு நிறைவைக் காணும் முதல் ஜாதி – தீண்டாமை, பாராமை, நெருங்காமை போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக வெடித்த வைக்கம் ‘சத்தியா கிரகத்தினை’யொட்டி, நாளை (12.12.2024) காலை கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறவிருக்கும் விழா நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய, வரலாற்றுச் சாதனையாக காலம் உள்ளவரை கல்வெட்டுகளாக நிலைத்திருக்கும்!
வைக்கம் போராட்டத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு அரசும் – கேரள மாநில அரசும் இணைந்து நடத்தும் மூன்றாவது விழா – நாளை நடப்பது!

வைக்கம் போராட்டத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும் இணைந்து நடத்திடும் வைக்கம் சத்தியாகிரக வெற்றியின் மூன்றாவது விழா இது!
1. ஓராண்டுக்கு முன் கேரள மாநிலம் வைக்கத்தில் தொடக்க விழா!
2. சென்னையில் நிறைவு விழா (சென்னை பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் – தமிழ்நாட்டில், எளிய முறையில்).
3. இப்போது (12.12.2024) வைக்கத்தில் சிலை புத்தாக்கம், நினைவகம், நூலகம் திறப்பு விழாக்கள் (மீண்டும் கேரளத்தில்).
அரசியலைத் தாண்டி, அகிலம் வியக்கும் அற்புதத் திருவிழா – பெருவிழா!
1924 இல் கேரள பெருமக்களால் தொடங்கி, தந்தை பெரியார் தலைமையில் அவர்களும், தமிழ்நாடு போராளிகளான அன்னை நாகம்மையார், கண்ணம்மை யார், கோவை சி.ஏ.அய்யாமுத்து, நாகர்கோவில் டாக்டர் நம்பெருமாள் போன்றவர்கள் பங்கேற்றனர்.
(பெருந்தலைவர் காமராஜர் தனது இளவயதில் அதில் கலந்துகொள்ளச் சென்று, தனது வீட்டாரால் மீட்டு அழைத்துக் கொண்டு போகப்பட்டவர் என்பதை அவரே வெளியிட்டுள்ளார்கள்)

அடக்குமுறைகளை எதிர்த்து
ஓராண்டு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம்!
ஓராண்டு காலம் தொடர்ந்து நடைபெற்ற அந்த அறப்போராட்டத்தின் இறுதிவரை, அடக்குமுறை, துன்புறுத்தல்கள் போன்றவை ஏவப்பட்டன.
கேரளத்தில் டி.கே.மாதவன் அவர்களின் முன்னெ டுப்பினால் தொடங்கப்பட்டு, ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கே.பி.கேசவமேனன், டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் போன்ற பலரும், ஏராளமான ‘சத்தியாகிரகிகளும்’ போராடினர்.
அண்ணல் காந்தியார் தொடக்கத்தில் இதற்கு இணக்கமாக இல்லாவிட்டாலும், வைதீக நம்பூதிரி யார்களிடம் – அவர்களது ஜாதி, தர்ம சம்பிரதாயத்தை மதித்தே கட்டடத்திற்கு வெளியே அமர்ந்தே பேசிய சமரசமும் தோற்றுப் போன பின்பு, தந்தை பெரியார் தலைமைக்குப் பின்னரே, அது வீறுகொண்ட போராட்டக் களமாகி, ஓராண்டு சளைக்காமல், பல்வேறு தடைகளைத் தாண்டி கள வெற்றிகளைப் பறித்தது!
தந்தை பெரியாரின் ஆயுளை முடிக்க எதிரிகள் நடத்திய ‘சத்ரு சங்கார யாகம்’
இடையில் தந்தை பெரியார் ஆரம்பித்ததை முடிக்க வைதீகபுரி வர்ணாசிரமவாதிகளின் ‘சத்ரு சங்கார யாகம்’ எல்லாமும் நடந்து, அது பலிக்காமல், மன்னர் மறைந்த பரிதாபம் ஏற்பட்ட பிறகு பொறுப்பேற்ற, ராணியாரின் அருமுயற்சியினால் வைக்கம் போராட்டத்திற்குப் பல கட்ட வெற்றிகளாக – தெருவில் நடக்கும் உரிமையை அம்மக்கள் பெற முடிந்தது என்பது வரலாற்றில் வைர வரிகள் ஆகும்!

இதற்கான நினைவுச் சின்னமாக முதல் கட்டத்தில் 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் முதல மைச்சராக இருந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு சிலை எழுப்பி, நினைவக ஏற்பாட்டினை 30 ஆண்டுகளுக்குமுன் (31.1.1994) வைக்கத்தில், எனது (கி.வீரமணி) தலைமையில், அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். அன்றைய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் தென்னவன் அவர்கள் வரவேற்க, கேரள மாநில அமைச்சர்கள் பலரும், தலைவர்களும் பங்கேற்றனர்!
நினைவகம், பெரியார் சிலை, நூலகம் என்று பொலிவுடன் நினைவுச் சின்னங்கள்!

அந்த நினைவகம் – சிலை – சிதிலமடைந்த நிலையில், இன்றைய நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு, இதில் தக்க முனைப்பு காட்டி – உரிய நிதி ஒதுக்கி, விரிவாக்கம் செய்து, பொலிவுடனும் அமைத்து, நாளை (12.12.2024) கேரள முதலமைச்சர் மாண்பமை திரு.பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் நினைவகத்தையும், விரிவாக்கப்பட்ட நூலகத்தையும் திறப்பு விழா நடத்திடவிருக்கும் நிலையில், தந்தை பெரியாரின் திராவிடர் (தாய்) கழகத்துக்கு உரிய பெருமையும், பிரதிநிதித்துவமும் தருவது முக்கியம் என்ற பெரு நோக்கோடு, நம்மையும் (கி.வீரமணி) அழைத்து, முன்னிலை ஏற்கச் செய்துள்ளதைப் பாராட்டி, நன்றி செலுத்த வார்த்தைகளே இல்லை.

ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் நன்றி!
‘‘நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பு” என்றாரே நம் அறிவாசான் தந்தை பெரியார். அதனை நாம், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும், அதேபோல, கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களுக்கும், அவரது அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில், கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.
இது ஒரு குறிப்பிட்ட மாநில மக்களின் வெற்றி – நன்றிக்குரிய சின்னங்களின் திறப்பு விழா என்று கருதி, இதன் முக்கியத்துவத்தை அறியாமல் சுருக்கிவிடக் கூடாது!
சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் காலம், எல்லைகளைக் கடந்து, இனிவரும் தலைமுறைகளுக்கும் உணர்த்தக் கூடியவை!

1. சமூகக் கொடுமைகள், அநீதிகள், ஜாதி, தீண்டாமை போன்ற சமூகப் புற்றுநோய்களை அகற்ற – ‘‘மண் எல்லை பார்க்காமல், களமாடத் தயாராகுங்கள்; மானிடப் பரப்பே – மனித உரிமைப் போருக்கான எல்லைகள்” என்ற அரிய வலராற்றுப் பாடத்தை இவ்விழாக்கள் உலகுக்கும், இன்றுள்ள இளைய – இனிவரும் தலைமுறைகளுக்கும் பறைசாற்றுகின்றன!
2. அறப்போராட்டங்களை அடக்குமுறைகளும், ஒடுக்குமுறை அதிகாரங்களும் ஒருபோதும் அடக்கி வெற்றி கொள்ள முடியாது என்ற பாடத்தைக் கற்கவேண்டியவர்களுக்குக் கற்றுத்தரும் வரலாற்றுக் காட்சிப் படிப்பினை வகுப்புகளாகும்!
3. கடமையாற்றும் முற்போக்கும் ஆட்சிகள் எப்படி சமூக வரலாற்றுப் போராட்டங்களை அங்கீகரித்து வரலாற்று ஆவண அங்கீகாரங்களாக படைக்கும்; வருங்கால சந்ததிகளுக்கான களப் பாசறை முகாம்க ளாக்கும், புதியதோர் சமத்துவ, சுயமரியாதை புது உலகைப் படைக்க மாநில எல்லைகளையும், அரசியலையும் ஒதுக்கி, மானிட உரிமைகளுக்கே முன்னுரிமை என்ற பாடம் போதிக்கும்; அதற்கு உணர்வுகளின் ஒத்துழைப்பு வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு, தக்கதோர் சான்றாவணமாகும் – இந்தத் திறப்பு விழாக்கள் என்ற சிறப்பு விழாக்கள்!
மீண்டும் அனைவருக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!!
அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
வைக்கம் நினைவிடத்தின் ஒரு பகுதியை திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் அன்ப ளிப்பாக அளித்துள்ளார் என்பது பாராட்டி நினைவு கூரத்தக்கதாகும்.
அத்துணைப் பேருக்கும் எமது கனிவு மிகுந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
11.12.2024 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *