சென்னை, டிச.10- டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அ.தி.மு.க.செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் விவகாரம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் காட்சிப் பதிவுகளுடன் ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” என தம்பிதுரை எம்.பி. மழுப்பி இருக்கிறார். அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது, அ.தி.மு.க. ஆதரித்தது.
நாடகம் எடுபடாது
டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார். மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை.
இதேநிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத் தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.
அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டில்லியில் எதிர்க்க வேண் டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?
பூசணிக்காயை சோற்றில்…
மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத்துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? கெட்டிக்காரன் புளுகுஎட்டு நாள் என்பார்கள். எடப்பாடி பழனிசாமியின் புளுகும், புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன். மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.