சென்னை, டிச. 9- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்று (9.12.2024) தொடங்கியது. இலங்கை இரா.சம்பந்தன், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உள்ளிட்டவர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்றக் கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று (9.12.2024) காலை 9:30 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், சட்டமன்றப் பேரவை மேனாள் உறுப்பினர்களான, ஜ.முகமதுகனி, எஸ்.ஆர்.ஜெயராமன், பி.எம்.தங்கவேல்ராஜா, சி.கணேசன், கா.கோ.ரமேஷ், சி.சண்முகம், டாக்டர் வெ.புருஷோத்தமன், க.சுந்தரம், ஓ.ஆர்.இராமச்சந்திரன், எஸ்.என்.பால சுப்பிரமணியன், மா.தண்டபாணி, கி.செல்வராஜ், ஏ.கோதண்டம், மார்கரெட் எலிசபெத் பீலிக்ஸ், சி.சுப்புராயர் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
அதேபோன்று, இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் தலைவர்
இரா.சம்பந்தன், மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி, இந்திய இராணுவ மேனாள் தலைமைத் தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.அய். திருச்சிபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம், தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் பி,.சங்கர் ஆகியோரின் மறைவுக்கு அவர்கள் குறித்த இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் வாசித்து மறைவுற்றவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு சட்டமன்றம்:
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு
எதிராக தனித் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசமன்றத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ஆம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில், இம்மாத இறுதிக்குள் சட்டமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (9.12.2024) கூடும் என்று பேரவை தலைவர் அப்பாவு கடந்த நவம்பர் 25ஆம் தேதி அறிவித்திருந்தார். கடந்த 2ஆம் தேதி நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், சட்டமன்றக் கூட்டத்தை டிசம்பர் 9, 10ஆம் தேதிகள் (இன்றும், நாளையும்) என 2 நாட்கள் நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியையும் வழங்கக்கூடாது என்றும், சுரங்கத்திற்கு தேர்வான பகுதி ஏற்கெனவே பல்லுயிர் பெருக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படுவதாக சட்டமன்றத்தில் தீர்மானத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
மேலும் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசும், மக்களும் ஏற்க மாட்டார்கள் என்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு எதிர்த்த போதும் சுரங்க ஏல நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 509 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன – அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, “சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன. இவற்றை புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், அம்பத்தூர் தொகுதியும் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து 150 மின் மாற்றிகளை மாற்றுவது குறித்து அ.தி.மு.க.வின் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாடு முழுவதும் 11 ஆயிரத்து 509 மின்மாற்றிகள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. மதுரை திருமங்கலம் தொகுதியிலும் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறினார்.
இதுவரை இல்லாத அளவுக்கு நகராட்சிகளுக்கு அதிக அளவு நிதி – அமைச்சர் கே.என். நேரு பதில்
மதுரையில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு, “இதுவரை இல்லாத அளவுக்கு நகராட்சிகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து நகராட்சிகளிலும், கால்வாய் தூர் வாருதல், மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன.
மதுரை புறநகர் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கோடியிலும், மதுரை மாநகர் பகுதியில் ரூ. 1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
கேள்விகளுக்கு
அமைச்சர் துரைமுருகன் பதில்
சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், “சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது, வேண்டுமென்றால் அந்த பகுதியில் உய்யகொண்டான் கால்வாய் சீரமைத்து தரப்படும். உய்யகொண்டான் கால்வாய் 69 கி. மீ தூரம் சொல்கிறது, வேளாண் பாசனத்திற்கான கால்வாய் இது. இதன் மூலம் தஞ்சை திருச்சியில் 40,000 ஏக்கர் நிலங்கள் 11 மாதங்கள் பாசன வசதி பெறுகிறது.
கீழ்பெண்ணாத்தூர் கிளிஞ்சல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை விரைவில் திறக்கப்படும் ” என்று அவர் கூறினார்.