சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ், ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் கனிமம், சுரங்கம் அமைச்சகம் நடத்திய 4ஆவது ஏலத்தில் 7.11.2024 அன்றுஸ்டெர்லைட் வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளது.
இதன்படி ஆந்திர மாநிலம் பாலே பாளையம், தமிழ்நாட்டில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
“அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர் மலைக்கருகே 2015.51 எக்டேரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957இன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4ஆவது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வேதாந்தாவின் துணை நிறுவனம்
இந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சூழல் சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் அமைந்திருக்கும் குக்கிராமம்தான் அரிட்டாபட்டி. மண் வளமும் மலை வளமும் உள்ள இந்தப் பகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. 2015.51 எக்டேர் பகுதியில்தான் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலை இச்சுரங்கத்தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது.
பல்லுயிர் பாரம்பரியம்
குளங்கள், நீர்சுனைகள், ஊற்றுகள், தடுப்பணைகள், பறவைகள், விலங்குகள் என தொல்தமிழர் வரலாற்று மற்றும் உயிர்ப்பன்மையமிக்க பகுதியாக அரிட்டாபட்டி விளங்குகிறது. அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமானது; ஏழு சிறு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளது. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன.
இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டிலியலிட்டு அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு. கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் வகையில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.15 எக்டர் பரப்பிலான பகுதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கியுள்ளதற்கு தமிழ்நாடு அரசு எதிர்த்துள்ளது.
தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப்பகுதிகளில் ஒன்றான அரிட்டாபட்டிச் சீரழிக்கும் வகையிலான இந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது தற்போது இந்தப் பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன.
மேற்கண்ட குளங்கள்,, ஏரிகள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியானது 2,200 ஆண்டுகள் பழைமையான தமிழி எழுத்து கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடைவரை கோயில்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்க உள்ள பகுதியாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த இடம் பல்லுயிர் சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப்பட்டது.
உறுதியான நிலைப்பாடு
2022ஆம் ஆண்டு அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 எக்டேர் பகுதியை பாரம்பரிய உயிர்ப் பன்மையம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது. பெருங்கற்காலத்தைச் (megalithic) சேர்ந்த அமைவுகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் என தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களை தாங்கி நிற்கும் இடம்.
தமிழ்நாட்டின் தொண்டை வரலாறு அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. திராவிட மாடல் அரசின் உறுதியான நிலைப்பாடு வரவேற்கத்தக்கதே!