உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

Viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச.5 உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.
இந்திய பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் யுஜிசி பரிந்துரைப்படி ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறதா என்றும் அத்தகைய சேர்க்கை எந்தெந்த கல்வி நிறுவனங்களில் உள்ளன என்றும் மாநிலங்களவை மதிமுக பொதுச்செயலரும் மூத்த உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு அமைச்சர் சுகந்தா மஜும்தார் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்: பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மற்றும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை மாணவர்களை சேர்க்க உயர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் கொள்கைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு இரு முறை மாணவர்களை சேர்ப்பது கல்வி நிறுவனங்களின் விருப்பமாகும்.

ஆண்டுக்கு இரு முறை சேர்க்கையை கையாளும் கல்வி நிறுவனங்களின் தயார்நிலையைப் பொருத்து. பருவகால (செமஸ்டர்) தேர்வுகளுக்கான திட்டம் உள்பட, ஆண்டுக்கு இரு முறை மாணவர்களை சேர்க்கும் கொள்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு திட்டத்தை உயர் கல்வி நிறுவனங்கள் கவனமாகத் தயாரிக்க வேண்டும்.
இது தொடர்பான தகவல்கள் இடம்பெற்ற அறிவிக்கையை 2024, ஜூன் 9-ஆம் தேதி யுஜிசி வெளியிட்டுள்ளது. மேலும், யுஜிசியிடம் உள்ள தகவல்களின்படி, ஒன்றிய அர்சின் கீழ் வரும் கேரளம் பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம், ராஜஸ்தான் பல்கலைக் கழகம், அய்தராபாத் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம், நாகாலாந்து பல்கலைக்கழகம் ஆகியவை ஆண் டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை வழங்கும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அதிர்ச்சித் தகவல்
கடந்த 5 ஆண்டுகளில் 730 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை
மாநிலங்களவையில் அரசு தகவல்
புதுடில்லி, டிச.5- ஒன்றிய பாதுகாப்பு படை வீரர்களின் பணிச்சூழல் தொடர் பாக மாநிலங்களவையில் முன்வைத்த கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:- கடந்த அய்ந்து ஆண்டுகளில் மத்திய ஆயுத காவல் படை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த 730 வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர். பல்வேறு சூழ்நிலை காரணமாக 2020-இல் 144 பேர், 2021-இல் 157 பேர், 2022-இல் 138 பேர், 2023-இல் 157 பேர், 2024-ல் 134 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 47,891 பேர் முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். 7,664 பேர் விலகியுள்ளனர். இவ்வாறு ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *