சம்பல் பகுதிக்கு தடையை மீறி செல்ல முயற்சி ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய காவல்துறை

Viduthalai
3 Min Read

காசியாபாத், டிச.5 தடை யைமீறி நேற்று சம்பல் செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை காஜியாபாத் எல்லையில் உ.பி. காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ராகுல் காந்தி
உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந் தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் நேற்று (4.12.2024) சென்றனர். காலையில் டில்லியில் இருந்து புறப் பட்ட அவர்கள், உத்தரப் பிரதேசம் செல்லும் வழியில் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் சம்பலுக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டு, சாலையில் தடைகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன. தடுத்து நிறுத்தப் பட்ட பின்பு வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற ராகுல் காந்தி காவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

உரிமை
இந்நிலையில், செய்தியாளர் களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் சம்பலுக்கு செல்வதற்கு முயன்றோம், காவ லர்கள் அனுமதி மறுக்கிறார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கு செல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்துகிறார்கள். நான் காவலர்களுடன் தனியாக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் அதனையும் ஏற்கவில்லை.இன்னும் சில நாட்களுக்குப் பின்பு நாங்கள் வந்தால் அப்போது அவர்கள் எங்களை அங்கு செல்ல அனுமதிப்பதாக கூறுகிறார்கள். இது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கு எதிரானது, அரசமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. நாங்கள் அமைதியாக சம்பலுக்குச் சென்று அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவும், அங்குள்ள மக்களைச் சந்திக்கவும் விரும்பு கிறோம். அரசமைப்புச் சட்டம் எனக்கு வழங்கி யிருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. இதுதான் புதிய இந்தியா,

அரசமைப்புச் சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா
அம்பேத்கரின் அரசமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா. அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார். இந்தப் பேட்டியின்போது அரசமைப்பு சட்டத்தின் பிரதியை ராகுல் கையில் வைத்திருந்தார்.
தாங்கள் தடுத்து நிறுத்தப் பட்டது குறித்து ராகுல் காந்தியுடன் சென்ற அவரது சகோதரியும், வயநாடு மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி கூறுகையில், “சம்பலில் என்ன நடந்ததோ அது தவறு. ராகுல் காந்தி மக்களவை எதிர்க் கட்சித் தலைவர். பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்திக்க இந்திய அரசமைப்பு சட்டம் அவருக்கு உரிமை வழங்கியுள்ளது. அவரை இவ்வாறு தடுத்து நிறுத்த முடியாது.
காவலர்களுடன் தனியாக செல்லத் தயார் என்று ராகுல் கூறிய பின்பும், அவர்கள் அதனைச் செய்யத் தயாராக இல்லை. காவ லர்களிடம் அதற்கு பதிலும் இல்லை. அந்த அளவுக்கு உத்தரப் பிரதேசத்தில் நிலைமை சமாளிக்க முடியாத அளவில் உள்ளதா? நாங்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தோம் என்று அவர்கள் ஆணவமாக கூறுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, சம்பல் பகுதியில் பாரதிய நகாரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163 (முன்பு 144 தடையுத்தரவு)-ன் படி கும்பலாக கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த இந்த தடையுத்தரவு ஞாயிற்றுக்கிழமை முடி வடைந்திருந்த நிலையில், தற்போது டிசம்பர் 31-ம் தேதி வரை தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் கால மசூதி உள்ளது. இதில் கடந்த 24-ம் தேதி இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாக தொட ரப்பட்ட வழக்கில் கள ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இந்நிலையில் சம்பல் வன்முறை, கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உட்பட பலர் காயம் அடைந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *