கேள்வி 1: ஸநாதன எதிர்ப்பைத் திசைதிருப்பவே தமிழ் தேசிய அரசியல் அதிகமாகப் பேசப்படுகிறது என்ற கருத்து சரியானதா?
– சூர்யா, கருமண்டபம்
பதில் 1: அதுசரியே என்பதைத் தாண்டி, இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை மறைக்கவும்கூட!
கேள்வி 2: உத்தரப் பிரதேசத்தில் மசூதியை ஆய்வு செய்வதாகக் கூறி மீண்டும் மதக் கலவரத்தை ஏற்படுத்தி யிருக்கிறார்களே?
– நிவேதிதா, குடந்தை
பதில் 2: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் இந்த நிலைமைக்குத் தூண்டுதலாக இருக்கிறதோ என்ற அய்யமும் பரவலாக ஆங்காங்கே உள்ளது!
கேள்வி 3: தந்தை பெரியாரின் கொள்கைகளை அமல்படுத்துவதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாகச் செயல்படுவது குறித்து?
– செழியன், பொள்ளாச்சி
பதில் 3: சரியான திசையில் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு ஒவ்வொரு நாளும் தமது சாதனைகள் மூலம் புகழ் மகுடம் சூட்டுகிறார் நமது ஒப்பற்ற துணை முதலமைச்சர்!
கேள்வி 4: மோடியின் ஆட்சியில் மேற்கத்திய நாடுகளுக்கு அதிகளவில் இந்தியர்கள் புலம் பெயர்ந்து கொண்டிருப்பதாக வரும் புள்ளி விவரங்கள் குறித்து தங்கள் கருத்து என்ன?
– சிந்து, பாளையங்கோட்டை
பதில் 4: அதற்குக் காரணங்களை அரசியல் ஆய்வாளர்கள் – விருப்பு, வெறுப்பு இன்றி ஆய்வு செய்தல் அவசியம்!
கேள்வி 5: ‘விஸ்வகர்மா’ எனும் குலக்கல்வித் திட்டத்தை அமல்படுத்த மறுக்கும் ‘திராவிட மாடல்’ முதலமைச்சரை ஏனைய மாநில முதலமைச்சர்களும் பின்தொடர்வார்களா?
– மலர்விழி, திருச்சி
பதில் 5: இவரைப் போலவே கொள்கைத் தெளிவும், துணிவும் இருந்தால் செய்வார்கள்! அந்த மண் பெரியார் மண்ணாக மாறினால் மட்டுமே அது சாத்தியம்!
கேள்வி 6: பன்னாட்டுப் பேசு பொருளாகிவிட்ட அதானி ஊழலை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பதற்குக் காரணம் மோடியா?
– பாரி, கோவை
பதில் 6: அவர் மட்டும் என்று கூற முடியாது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்பட எல்லோரது கூட்டுத் தடுப்பு முயற்சியும் கூட காரணமாக இருக்கலாம்.
கேள்வி 7: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் தனது பிறந்த நாளில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதி களுக்கு மேல் வென்றெடுக்க உறுதி பூண்டிருப்பது குறித்து?
– அன்பு, ஆவடி
பதில் 7: அவரது பொறுப்பும் கடமையுமே அவரை நாளும் மக்களிடையேயும், அரசியல் ஆய்வாளர்களிடமும் மென்மேலும் உயர்த்திக் காட்டப் பெரிதும் காரணமானவை ஆகும்!
கேள்வி 8: 92ஆவது பிறந்த நாள் காணும் தங்களது 82 ஆண்டு பொது வாழ்க்கையானது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து கூறுவீர்களா?
– சம்பத், ஈரோடு
பதில் 8: தனிப்பட்ட வாழ்க்கை இருந்தால் அல்லவா அது என் வாழ்க்கையிலே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி கூறிட!
எல்லா நேரமும் எனக்கு இயக்க, பொதுவாழ்வுதான். எனது குருதிக் குடும்பத்திற்கும் அதில் ஓர் உதவிடும் அம்சம்; அவ்வளவுதான்!
கேள்வி 9: இந்நாட்களில் இணைய வழி மோசடிகளால் மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து?
– ராகுல், நெல்லை
பதில் 9: பரிதாபத்திற்குரியது: ஆனால், எப்படி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வீழ்ந்து வருகின்றனர் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!
கேள்வி 10: இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களும். கைது நடவடிக்கைகளும் குறையவில்லையே?
– மீனாட்சி, மண்டபம்
பதில் 10: மேலும் கூடியிருக்கிறது. “கத்தி போச்சு: வாலு வந்தது டும் டும் டும்” என்ற கதைதான் நம் நினைவுக்கு வருகிறது!