புதுடில்லி, நவ.28- அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்றும் (27.11.2024) ஒத்திவைக்கப்பட்டன.
குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதில் அதானி முறைகேடு விவகாரம், மணிப்பூர் கலவரம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் ஏற்பட்ட வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளி யில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே இரு அவைகளும் முடங்கின.
அரசியல் சாசன நாள் கொண் டாடப்பட்டதால் நேற்று முன்தினம் (26.11.2024) இரு அவைகளிலும் அமர்வுகள் நடை பெறவில்லை.
இதைத்தொடர்ந்து 2ஆவது நாளாக நேற்று (27.11.2024) மீண்டும் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின.
அதன்படி மக்களவை காலையில் கூடியதும் கேள்வி நேர அலுவல்களை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தொடங்கினார்.
ஒத்திவைப்பு தாக்கீது நிராகரிப்பு
ஆனால் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு அதானி முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்களான மாணிக்கம் தாகூர், ரந்தீப் சுர்ஜேவாலா, மணிஷ் திவாரி ஆகியோர் தாக்கீது அளித்து இருந்தனர்.
ஆனால் அதை நிராகரித்த மக்களவைத் தலைவர் கேள்விநேரத்தை நடத்தினார். அதன்படி பா. ஜனதா உறுப்பினர் அருண் கோவில் கேள்வி நேரத்தை தொடங்கினார்.
இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கக்கோரி முழக்கமிட்டனர்.
காங்கிரஸ் மற்றும் சமாஜ் வாடியை சேர்ந்த உறுப்பினர்களில் சிலர் அவையின் மய்யப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். அதானி முறைகேடு, மணிப்பூர் கலவரம், சம்பல் வன்முறை போன்ற பிரச்சினைகளை விவாதிக்குமாறு வலியுறுத்தினர்.
மக்களவைத் தலைவர் வேண்டுகோள்
அவர்களை இருக்கையில் சென்று அமருமாறு வேண்டு கோள் விடுத்த மக்களவைத் தலைவர் கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறும், அதன் பிறகு தங்கள் பிரச்சினையை எழுப்புமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே அவை 1 மணி நேரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் 12 மணிக்கு மீண் டும் கூடியபோதும் நிலைமை மேம்படவில்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். அவர்களது முழக்கங் களால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால், அப்போது அவையை வழிநடத்திய திலிப் சைகியா மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையிலும் அமளி
இதற்கிடையே அதானி முறைகேடு மற்றும் சம்பல் வன் முறை விவகாரம் மாநிலங்களவை யிலும் பெரும் புயலை கிளப்பியது.
அதானிமுறைகேடு குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தும் வகையில் 18 ஒத்திவைப்பு தாக்கீதுகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவருக்கு வழங்கி இருந்தனர்.
அவற்றை ரத்து செய்வதாக அவை தொடங்கியதும் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் இறங்கினார். எனவே அவையை 11.30 மணி வரை அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.
பின்னர் அவை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சிக ளின் போராட்டம் ஓயவில்லை. எனவே அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாகஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
இவ்வாறு அதானி விவ காரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் 2-ஆவது நாளாக நேற்றும் முடங்கியது.