சமூகநீதி வரலாற்றில் தனி சரித்திரம் படைத்த மேனாள் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் என்று அழைக்கப்படும் விசுவநாத் பிரதாப் சிங் அவர்கள் அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவரது அரசியல், சமூக தொண்டறம் மகத்தானது.
ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட கோடானு கோடி மக்களின் உரிமைக்காகவே உரு வாக்கப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை, திராவிட இயக்கத்தவர்களின், சமூகநீதிப் போராளிகளின் நியாயமான வேண்டு கோளை ஏற்று, அன்றைய பிரதமர் வி.பி.சிங் மண்டல் கமிஷனின் இரண்டு முக்கிய பரிந்துரைகளில் ஒன்றான, ஒன்றிய அரசின் துறைகளில் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்து, எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது, செயல்படுத்தினார்.
முதன் முறையாக (ஓ.பி.சி. என்ற) இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வேலை வாய்ப்புகளில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.
நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா போன்ற சமூகநீதித் தலைவர்களின் தொண்டறம்பற்றிக் குறிப்பிட்டுப் பதிவு செய்தவர்.
அதற்காகவே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வெளியே இருந்து கொடுத்த ஆதரவினை ‘வாபஸ்’ பெற்று, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தனர் 11 மாதங்களில்!
அதைப் பொருட்படுத்தாது, ‘‘நல்ல லட்சியங்களுக்காக ஒருமுறை என்ன நூறு முறைகூட பிரதமர் நாற்காலியை இழக்கத் தயார், தயார்’’ என்று முழங்கிய மகத்தான மாமனிதர் வி.பி.சிங் அவர்கள்.
அவரது நினைவு நாளில் (நவ.27) அவருக்கு நமது வீர வணக்கம்!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
27.11.2024