அரசமைப்பு முகப்புரையில் உள்ள சமதர்மம், மதச்சார்பின்மைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
புதுடில்லி, நவ.26 அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சார்பின்மை’ ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் நேற்று (25.11.2024) தள்ளுபடி செய்தது.
கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வரை, நாட்டில் அவசர நிலையை பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அமல்படுத்தியிருந்தது. அப்போது இந்தியாவை ‘‘இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு’’ என்பதற்குப் பதிலாக ‘‘இறையாண்மை கொண்ட சமதா்ம, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு’’ என்று விவரித்து, நாடாளுமன்றத்தில் 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை இந்திரா காந்தி அரசு நிறைவேற்றியது.
இதில் ‘சமதா்மம்’, ‘மதச்சார்பின்மை’ ஆகிய சொற்கள் அரசமைப்புச் சட்டத்தில் சோ்க்கப்பட்டதற்கு எதிராக பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி, மூத்த வழக்குரைஞா் அஸ்வினி குமார் உபாத்யாய, பல்ராம் சிங் என்பவா் ஆகியோர் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, அவசர நிலை காலத்தில் நாடாளுமன்றம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என கூறமுடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.
40 ஆண்டுகளுக்கும் மேலாகிய பின்னா் வழக்கா?
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமா்வு நேற்று (25.11.2024) தீா்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறுகையில், ‘அரசமைப்புச் சட்ட முகப்புரையில் சமதா்மம், மதச்சார்பின்மை ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்த விவகாரத்தை தற்போது எழுப்ப என்ன அவசியம் ஏற்பட்டது?
42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. தற்போது அந்தத் திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு எந்தவொரு சட்டரீதியான காரணமோ, நியாயமோ இருப்பதாக உச்சநீதிமன்றத்துக்குத் தெரியவில்லை.
அரசமைப்புச் சட்டத்தை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது போல, அந்தச் சட்டத்தின் முகப்புரையை திருத்தும் அதிகாரமும் அதற்கு உள்ளது.
அந்தச் சொற்கள் முகப்புரையில் சோ்க்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அந்த நடைமுறையை தற்போது ரத்து செய்ய முடியாது’ என்று தீா்ப்பளித்து மனுக்களை தள்ளுபடி செய்தனர்.