சென்னை,நவ.23- திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் பிர மாண்டமாக கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.11.2024) திறந்துவைத்தார்.
5.57 லட்சம் சதுர அடியில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இக்கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. 6,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணி புரியும் வகையிலும், பசுமை கட்டட வழிமுறைகளின்படியும் இந்த டைடல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாட்டிலேயே 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.
அந்த இலக்கை அடைவதற்கான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அய்க்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். தகவல் தொழில்நுட்ப துறையின் எதிர்கால அதீத வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2000ஆம் ஆண்டில் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை மேனாள் முதலமைச்சர் கலைஞர் நிறுவினார்.
இது தமிழ்நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்ப துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது. 2, 3ஆம் நிலை நகரங்கள் இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் தகவல் தொழில் நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்தும் வகையில், 2, 3ஆம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பில் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.11.2024) திறந்து வைத்தார். வெப்பராக்ஸ் சொல்யூஷன்ஸ், டாட்நிக்ஸ் டெக்னால் ஜிஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான உத்தரவுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கினார்.
அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர், டிஆர்பி. ராஜா, தொழில் துறை செயலர் அருண்ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
6,000 பேர் பணிபுரியலாம்: தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுர அடியில் அதி நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இக்கட்டடம் உருவாக்கப் பட்டுள்ளது.
இதில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைதொடர்பு சாதனங்கள், தடையற்ற உயர் அழுத்தமும் முனை மின் இணைப்பு. மின் இயக்கி. மின்தூக்கி, சுகாதார வசதி, தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை கட்டமைப்புகள், கண்காணிப்பு கேமராக்கள். அரங்கம், பாதுகாப்பு வசதிகள், உணவகம், உடற்பயிற்சி கூடம், 927 கார்கள் மற்றும் 2,280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி என பல்வேறு வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
6,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும், பசுமை கட்டட வழிமுறைகளின்படியும் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டின் வட பகுதியை சேர்ந்த, குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளை ஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன், அந்த மாவட்டங்களின் சமூக பொரு ளாதார நிலையும் மேம்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.