வயநாடு, நவ.20- கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, பூஞ்சிரி மட்டம், சூரல்மலை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை மாத இறுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் நிலை குலைந்தன. நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்துக்கு ஏற்ப நிவாரணம் வழங்கவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இதுவரை நிவாரண நிதி ஒதுக்கவில்லை. இதை கண்டித்து வயநாட்டில் அய்க்கிய ஜனநாயக முன்னணி, இடது முன்னணி சார் பில் முழு அடைப்புப் போராட்டம் நேற்று (19.11.2024) நடைபெற்றது.
காங்கிரசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் சாலைகளில் சென்ற பேருந்துகள் உள்ளிட்டவாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முழு அடைப்புப் போராட்டம் காரணமாக கேரளா-தமிழ்நாடு, கேரளா-கருநாடகா மாநில எல்லைகளில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.