கழகத் தலைவர் ஆசிரியர் களப்பயிற்சி உரை
சென்னை.நவ.20 கழக சொற்பொழி வாளர்களுக்காக நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிப் பட்டறையில் கழகத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சொற்பொழிவாளர் களுக்கு வகுப்புகள் நடத்தினர்.
மாநில அளவில் திராவிடர் கழக சொற்பொழிவாளர்களுக்கு சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நவம்பர் 16,17 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்புப் புத்தாக்கப் பட்டறை வகுப்புகள் காலை 9:30 முதல் மாலை 7:30 மணி வரை நடைபெற்றன.
முதல் நாள் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து முதல் வகுப்பாக ,”திராவிடமும், தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ”நூற்றாண்டு காணும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்” எனும் தலைப்பில் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி, வீரமணி, “வைதீக எதிர்ப்பு மரபு” எனும் தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு, ‘‘சாஸ்திரங்கள், புராணங்கள், அதிகம் அறியப்படாத ஆவணங்கள்” எனும் தலைப்பில் தினகரன் செல்லையா ஆகியோர் வகுப்புகளை நடத்தினர். மாலை 5 மணிக்கு மேல் சொற்பொழிவாளர்கள் தனித்தனியாக 5 நிமிடங்களில் தனி தலைப்புகளில் சொற்பொழிவாற்றும் நிகழ்வு நடை பெற்றது. ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் ஒருங் கிணைத்தனர்.
இரண்டாம் நாளில் முதல் வகுப்பாக “திராவிடர் பண்பாடும் புதிய தரவுகளும்” எனும் தலைப்பில் பேராசிரியர் அ.கருணானந்தன், ‘‘மதச்சார்பின்மை இன்றைய நிலை” எனும் தலைப்பில் வினோத், “அம்பேத்கர் – பெரியார்: பிரிக்க முடியாத கொள்கை உறவு” எனும் தலைப்பில் தலித் முரசு ஆசிரியர் தோழர் புனித பாண்டியன், “அறிவியலின் புதிய திசை – பகுத்தறிவுப் பார்வை” எனும் தலைப்பில் மருத்துவர் கணேஷ் வேலுச் சாமி, “பேச்சின் புதிய நுட்பங்களும், எதிர்பார்ப்புகளும்” எனும் தலைப்பில் முனைவர் கோ.ஒளிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர். கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் “நூற்றாண்டு காணும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்” எனும் தலைப்பில் முதல் நாளின் தொடர்ச்சியைத் தொடர்ந் தார்.
இதில் பொருளாளர் வீ.குமரேசன், செயவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா ஜெயக்குமார், இரா. குணசேகரன் உள்ளிட்ட 33 பேர் மற்றும் ”மந்திரமா? தந்திரமா?” கலைஞர்கள் 5 பேர் என 38 பேர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியருடன் சொற் பொழிவாளர்கள் மற்றும் ஒருங்கிணைப் பாளர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்ற வாசலில் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் சான்றிதழ்களை ஆசிரியர் வழங்கினார். தோழர்கள் கலைமணி, பவானி, உடுமலை வடிவேல் ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.