தமிழ்நாட்டு மாவீரன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாள் 18-ஆம் தேதியன்று சென்னையிலும் வேறு இரண்டொரு ஊர்களிலும் காங்கிரஸ் தோழர்களால் கொண்டாட ப்பட்டிருக்கிறது.
அண்மையில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற பாரதி நினைவு நாளையும், சிதம்பரம் நினைவுகளையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியது சுத்த இரத்தம் ஓடும் தமிழனின் – திராவிடனின்- நீங்காக் கடமையாகும். பாரதி நாளில் பார்ப்பனர் பல நூறு பேர் கலந்துகொண்டனர். ஆரியப் பத் திரிகைகள் (பார்ப்பன அடிமைகளான காங்கிரஸ் ஏடுகள் உள்பட) விசேஷ வெளியீடுகளை வெளியிட்டன. தலையங்கம் தீட்டின. தொடர்ந்து பல நாட்களுக்கு வெகு சிறப்பாக சிதம்பரம் நினைவு நாளில்?- ஏதோ இரண்டொரு கூட்டம், இரண்டொரு ஊரில். அதைப்பற்றி இரண்டங்குலத்தில் செய்திகள் பேசியவர்களோ, எல்லோரும் திராவிடர். ஆனால் பெரும்பாலும் ஆரியத்திற்கு அடிதாங்கிகள் – தாம் பிறந்த இனத்தையே தூற்றிய பேதைகள் – வ.உ.சி. யின் தேச பக்தியை மட் டுமே கூறத்தெரிந்தவர்கள், அதுவும் பிறர் கூறியதைக் கேட்டு, அவரது இனப்பற்றைப் பற்றி எள் மூக்களவுகூட அறியாத கிராமபோன் பிளேட்டுகள்! விஷமப் பிரச்சாரத்தில் கைதேர்ந்த விஷப் பூச்சிகள்!
“பிராமணரல்லாதார்களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர்களாகிய ஆரியர்களை ‘மிலேச்சர்’ என்றும், யாகத்தின் பெயரால் கண்டவற்றையெல்லாம் தின்பவர்களென்றும், நினைத்த வற்றையெல்லாம் செய்பவர்களென்றும், சொல்லியும் – நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும், அவர்களைத் தொடாமலும், அவர்கள் தொட்ட பொருள்களைக் கொள்ளாமலும், அவர்களைத் தொட நேர்ந்த போது குளித்தும், அவர்களை இழிவுபடுத்தியும் வந்தார்கள். அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள். உடனே தங்களைப் பிராமணர்கள் என்றும், மற்றைத் தமிழர்களெல்லாம் சூத்திரர்களென்றும், சொல்லவும் எழுதவும் தலைப்பட்டார்கள்; அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார்களென்றும் நடத்தையிலும் காட்டினார்கள்.”
இப்படிக் கூறியிருப்பது யார்? நமது தேச பக்தர் வ.உசி.தான். அப்படி இல்லையென்று எந்தத் தமிழனாவது கூறுவானேயானால், அவனுக்கு மூளை குழம்பி விட்டிருக்க வேண்டும் அல்லது விஷமப் பிறவியாயிருக்க வேண்டும்.
இது மட்டுமா கூறினார்? மேலும் படியுங்கள்:
“இராஜாங்க உத்தியோகங்களும் ஸ்தலஸ்தாபன உத்யோகங்களும், பொது ஸ்தாபன உத்யோகங்களும் நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாருக்கும் அந்தந்த ஜாதியாரின் எண் ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி நம் தேசத்தாருள் ஒற்றுமையுண்டாகப் போவதேயில்லை யென்பதும், நமக்குள் ஒற்றுமையுண்டாகாமல் நாம் உண்மையான சுய அரசாட்சி அடையப் போவதே இல்லையென்பதும் மனித அறிவுடைய எவர்க்கும் தெளிவாக விளங்கத்தக்கவை. இவ்வுண்மைக்கு மாறாகப் பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர்.
‘‘ஞாயிறன்று சென்னை கடற்கரையில் பேசிய ஒரு தோழர், வ.உ.சி.யின் உள்ளத்தையே அலசிப் பார்த்த அதிமேதாவி போல ‘வகுப்பு வாதம்’ என்ற சொல்லை அசம்பாவிதமாகக் கையாண்டு உளறிக் கொட்டிப் பேத்தியிருக்கிறார். அவர் மூளைக் கோளாறுக்கு மருந்தாக இருக்கும் மேலே உள்ளவை.
5-11-1927இல் சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மகாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசிய போது வ.உ.சி. ஆற்றிய சொற்பொழிவிலிருந்து இவைகளை எடுத்திருக்கிறோம். அவருக்குப் பின்னால் வரும் தேசபக்தி அழுகல் சனிகளும் பொதுவுடைமைச் சருகுகளும் அவரைப் பற்றி வாயில் வந்தபடி வாந்தியெடுக்குமே என்பதற்காகவே அச்சொற்பொழிவைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம். 52பக்கம் கொண்ட இந்த சொற்பொழிவு நூல் கோவிற்பட்டி சரஸ்வதி பிரசில் அச்சிடப்பட்டது; சிவப்பு அட்டையுடையது. 39, 40, 45 மூன்று பக்கங்களிலும் காணப்படுவதை மேலே எடுத்துக் காட்டினோம்.
இனி, 41-ஆம் பக்கத்தில் 5ஆவது வரி முதல் உள்ள பகுதியைத் தருகிறோம், அவருடைய இனப்பற்றை மெய்ப்படுத்தவும், அவர் உள்ளத்தை அறியாத உலுத்தர் கூட்டத்திற்குப் புத்தி வருவதற்கும்:–
“தாங்கள் மேலான ஜாதியார்கள் என்றுகொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டுப் பிராமணர்கள் மற்றைய ஜாதியார்களுக்கு விதித்த அபராதத் தண் டனையை மாற்றிக்கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணரல்லாதார்கள் கையிலேயே இருக்கிறதைக் கண்டுபிடித்து நம் திருவாளர். ஈ.வெ. இராமசாமி நாயக் கரவர்கள் பிராமணரல்லாதார்களுக்குக் கூறி அதனை உபயோகிக்கும்படி செய்துகொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதார்கள் ஊக்கத்துடன் உறுதியாகச் செலுத்தித் தங்கள் அபராதத் தண்டனையை மாற்றிக் கொள்வார்களென்று நம்புகிறேன்.”
தமிழ் நாட்டின் திலகமாயும் முதற் புரட்சி வீரனாயும் விளங்கிய வ.உ.சி.யின் பாராட்டு, ‘பெரியாரின் சேவைக்கு; அவரைப் பின்பற்றும் படி திராவிட இனத்திற்கு வேண்டுகோள் – வ.உ.சி. கூறிய அதே காரியத்தைச் செய்து வரும் திராவிடர் சமூகத்தை “வகுப்புத் துவேஷக் கூட்டம்” என்று மேடை மீதேறி பிதற்றி வரும் மரமண்டைகளுக்கு வ.உ.சி. யின கூற்று பழுக்கக் காய்ச்சிய இரும்பாணியாக இருக்கட்டும்.
இது மட்டுமா? இன்னும் கூறுகிறோம்.
பிராமணப் புரோகிதர்களும் பூசாரிகளும் பிராமணரலா தார்களுடைய பொருள்களைக் கவருவதற்காகத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூட்சிகளையும், மோசங்களை யும், கொலைகளையும், பிற பல தீய செயல்களையும் எடுத்துக் கூறவேண்டும். ‘இந்து சமயம்’ என்பதன் பொய்களையும் புரட்டுகளையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லாதார்களின் பொருள்கள் கொள்ளையிடப்படுவதையும், பிராமணரல்லாதார்கள் தாழ்த்தப்படுவதையும், அக்கொள்ளைகளினின்றும் தாழ்வினின்றும், பிரா மணரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும் வழிகளையும் விளக்கிக் கூறவேண்டும்.”
இதுவும் “வகுப்புவாதியல்லாத” புரட்சி வீரர் வ.உ.சி. கூறியது தான். சுவாமி சிவானந்த சரஸ்வதியினால் எழுதப்பட்ட “ஞான சூரியன்” என்ற புத்தகத்திற்கு வ.உ.சி. தந்திருக்கும் முன்னுரையிலுள்ளது.
7-10-1927-இல் எழுதப்பட்டது.
மேலே காட்டியவைகளில் ஒரு வரியானது வ.உ.சி.யினால் கூறப்பட்டதல்ல என்று மெய்ப்படுத்த முடியுமா என்று அரசியல் ‘பச்சகானாக்களை’ அறை கூவிக் கேட்கிறோம்.
இப்படிப்பட்ட இனவளர்ச்சி கொண்ட ஒருவரின் நாளில் ஆரியர் எப்படிக் கலந்து கொள்வார்கள்? பாரதி நாளைக் கொண்டாடிய ஆரியர் வ.உ.சி. நானள ஏன் கொண்டாடவில்லை என்பது “பாரதி பக்தர்களுக்கு,” பாரதியைப் புரட்சிக் கவிஞன் என்று கூறி ஏமாற்றி வரும் சுயநலக் கும்பல்களுக்கு, இப்போது விளங்கவில்லையானால், அவர்களது அறிவு சூன்யத்திற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வேண்டுமானாலும் விடுகிறோம். நாட்டுப் பற்றுடன் இனப்பற்றும் இருக்க முடியும் என்பதற்கு வ.உ.சி.ஓர் எடுத்துக்காட்டு, அவர் நாளைக் கொண்டாடிய நவீன தேசபக்தர்களுக்கு இது விளங்காது – அநுபவம் என் னும் முரட்டுக்கையினால் பல குட்டுகள் வாங்க வேண்டும். அதுவரையில் விளங்காது.
இந்த நாளில் வ.உ.சி. இருந்தால் நம் கட்சியில்தான் இருப்பார் என்று கூறுவது மட்டுமல்ல. தலைமை வகித்து நடத்துவார். ஆரியம் இந்நாள் கப்பலேறியிருக்கும், அவர் கப்பலோட்டியாதலால்! வ.உ.சி. பார்ப்பனரைப் பற்றிக் கூறியிருப்பவை இன்னும் பல உண்டு. இது மாதிரியான சந்தர்ப்பங்களுக்காக அந்த அம்புகளை நம் தூணியில் போட்டு வைத்திருக்கிறோம். அவசியமேற்படும் போதெல்லாம் ஒவ்வொன்றாக வீசப்படும்.
இவ்வாறு கூறும் வ.உ.சி. ஒரு ‘தேசத் துரோகி,’ ‘வகுப்பு துவேஷி’ என்று இக்காலத்துப் புத்தகப் புழுக்களால் குற்றஞ் சாட்டப்படுமேயானால், திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு வ.உ.சி.யாகவே இருந்து புரட்சி செய்து மாள்வதையே பெறுதற்கரிய பெரும் பேறாகக் கொள்வர். இது உறுதி, வ.உ.சி. புகழ் வளர்க அவர் கண்டித்த ஆரியம் அடியோடு அழிக! திராவிடம் வாழ்க!