ஊசிமிளகாய்
தமிழ்நாட்டு கிராமியப் பழமொழிகளில் ஒன்று, ‘‘வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது‘‘ என்று; அதற்குச் சரியான எடுத்துக்காட்டாக, ‘‘நவீன விபீஷ்ணர்’’ ஒருவர் ‘‘பிராமணர் பாதுகாப்பாக’’ ஒரு கூலிப்படை போல் குத்தகை எடுத்து, பல வான்சுரரை விட்டு வந்து வாழும் ‘‘பூசுரர்களை’’யெல்லாம் சென்னை தலைநகரில் மாநாடு கூட்டி, பொய் அழுகை, போலிக் குற்றச்சாட்டைக் கூறி, தானே ஒரு பெரிய வீராதி வீரர் என்பதைப்போல் நீட்டி முழக்கினார். அக்கூட்டத்தில் ஒருவர் அசூயை, அருவெறுப்பு நிறைந்த அவதூறுக்குள்ளாக்கி ஆந்திர மக்களைப்பற்றிப் பேசின பேச்சுக்காக, உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீனைக் கேட்டு மனு போட்டு, அந்த நீதிபதியிடம் ‘‘நன்றாக குற்றம் இழைத்துள்ளார்’’ என்ற சர்டிபிகேட்டும் பெற்று, ஜெயிலின் கதவுக்குள் சிக்காமலிருக்க தலைமறைவு என்ற ‘‘வீரத்தின்?’’ உச்ச வியூகத்தில் வசிக்கிறார்!
என்னே பரிதாபம்!
எழுதிக் கொடுத்தவர் எங்கோ?
வஜனம் பேசிய அந்தப் பெண்ணோ விசனத்துடன்.
‘‘அவனுக்கென்ன, அகப்பட்டவள் நான் அல்லவோ’’ என்று மூக்கால் அழுது, முக்காடு போட்டு தலைமறைவு அஞ்ஞான வாசத்தினை நடத்தி வருகிறாராம்!
வாய் வீரம் வக்கணை பேசும் இந்த ‘பிராமணோத்த மர்களான’ பி.ஜே.பி. வீரர்கள் எச்.ராஜா, எஸ்.வி.சேகர், ஆர்.வி.எஸ்.மணியம் போன்றவர்கள் சவால் விட்டு வாய் நீளம் காட்டி, பகிரங்க மன்னிப்புக் கேட்க ‘க்யூ‘ வரிசையில் அல்லவா நின்று கொண்டிருக்கின்றனர்!
‘‘சுக்னே பவந்து‘‘ என்று கூறிய வசுதேவக் குடும்பத்தத்துவம் பேசியவர்கள் பெயிலுக்கும் – ஜெயிலுக்கும் இப்படி அலைவதுபற்றி என்ன சொல்ல!
‘எல்லாம் பகவான் செயல்!‘
‘அவனின்றி ஓரணுவும் அசையாதே’ என்று சொன்னால், சும்மாதானே இருக்கவேண்டும் நம்பிக்கை யாளர்கள்.
‘பிராமணர் பாதுகாப்புக்கு’ மாநாடு நடத்தியவருடைய மாநாட்டிற்குக் கைமேல் பலன் தலைமறைவுதானே, பெயிலும் ஜெயிலும்தானே!
இனிமேலாவது இந்தத் துரோக மண் குதிரைகளை நம்பி, யாரோ மேடை ஹீரோ, ஹீரோயின்களாக ஆசைப்படுவது எவ்வளவு ஆபத்து என்பது புரிகிறதா?
அந்த நாடகத்தை நடத்தியவர் அதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா? தூண்டியவர் (Abettor) என்பவர்தானே மூல காரணம். ‘‘அவர் எப்போது’’ என்று நாம் கேட்கமாட்டோம்!
‘‘‘பிரம்மஹத்தி தோஷம்’ சும்மா பிடித்து விடுமா?’’ என்றது ஆரியம்.