புதுடில்லி, நவ.15 அரியானாவில் பாஜகவுக்கு வெற்றி தந்த, ‘பிரிந்தால் இழப்பு’ எனும் முழக்கம் மகாராட்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராட்டிர சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-இல் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் ‘மகா யுதி’ கூட்டணிக்கு ஆதரவாக, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது உரையில் ‘பட்டேங்கே தோ கட்டங்கே’ (பிரிந்தால் இழப்பு) எனும் முழக்கத்தை தவறாமல் எழுப்பி வருகிறார். இந்த முழக்கம் உ.பி. முதலமைச்சர் யோகியால், அரியானா பேரவை தேர்தலில் முதன்முறையாக எழுப்பப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியும் தனது பிரச்சாரத்தில் முதலமைச்சர் யோகியின் முழக்கத்தை அங்கீகரித்து பேசினார்.
ஹரியானாவில் இந்துக்களின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்கும் இம்முழக்கம் பாஜக வெற்றிக்கு அடித்தளமிட்டதாக கருதப்படுகிறது. இது தற்போது, அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜகவின் அதிகாரபூர்வக் முழக்கம் என்றானது. இதை மகாராட்டிர தேர்தல் பிரச்சாரத்திலும் தொடரும் உ.பி. முதலமைச்சர் யோகிக்கு, ஆளும் மகா யுதி கூட்டணியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எதிர்ப்பவர்களில் ஒருவரான பாஜக சட்டமன்ற உறுப்பினர் பங்கஜா முண்டே கூறுகையில், ‘‘உ.பி. போன்ற மாநிலங்களில் எடுபடும் இந்த முழக்கம் மகாராட்டிராவில் தேவையில்லை. ஏனெனில் இங்கு வட மாநிலங்கள் போன்ற அரசியல் சூழல் இல்லை. எனவே எங்கள் கட்சியை சேர்ந்தவர் எழுப்புகிறார் என்பதற்காக அதை நாங்களும் ஏற்க முடியாது. இலவச ரேஷன் அரிசி, சமையல் எரிவாயு, வீட்டுவசதி எனப் பல திட்டங்களை பிரதமர் மோடி ஜாதிமத வேறுபாடுகள் இன்றி அளித்துள்ளார். இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை தேர்தலில் முன்னிறுத்த வேண்டும்’’ என்றார்.
மகாராட்டிர பாஜகவின் இளம் தலைவரான பங்கஜா, மறைந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார். இவருக்கு முன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் யோகியின் முழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில், ‘‘மகாராட்டிர மண் என்பது சிவ பக்தர்கள், சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர் போன்றவர்கள் வாழ்ந்தது. இவர்கள் வகுத்த பாதையில் மகாராட்டிராவாசிகள் செல்கின்றனர். இதனால் உ.பி.க்கு உகந்த முழக்கம் இங்கு செல்லாது. முழக்கத்தின் மூலம் இங்குள்ள முஸ்லிம்கள் மனங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது’’ என்றார்.
இதற்கிடையில் மகா யுதி முழக்கத்திற்கு எதிராக மகா விகாஸ் அகாடியில் ‘ஏக் ஹய்தோ சேப் ஹை’ (ஒன்றாக இருப்பதுதான் பாதுகாப்பு) என முழக்கம் எழுப்புகின்றனர்.