திராவிடர் – திராவிடம்பற்றி புரியாத புண்ணாக்குகளுக்கும் – புரிந்தாலும், பார்ப்பனர் கூலிகளாய் வாய் நீளம் காட்டும் அரசியல் புல்லுருவிகளுக்கும் நமது இனமானப் பேராசி ரியர் க.அன்பழகன் அவர்கள் தரும் அருமையான விளக்கம் இதோ:
‘‘உண்மையாகவே நாம் ‘தமிழர்’ என்று சொல்லும்பொழுது நமக்குக் கிடைக்காத உரிமையும், பெருமையும் ‘திராவிடர்’ என்று சொல்லுகிறபொழுது நமக்குக் கிடைக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அந்தக் காலத்திலே தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சேர்ந்து நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றி அமைத்த பொழுது, சில பேராசிரியர்கள் கூட என்னிடத்திலே கேட்டார்கள்.
‘‘ஏதற்காக தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்க வேண்டும்? தமிழர் என்னும் பெயருடன் கழகம், இருக்கக்கூடாதா?’’ என்று கேட்டார்கள்.
நான் அவர்களுக்கெல்லாம் சொன்ன விளக்கம் இதுதான் – ‘‘பார்ப்பனரை விலக்காத பெயர் ‘தமிழன்’; பார்ப்பனரை விலக்கிய பெயர் ‘திராவிடன்‘’’ என்பதுதான்,
பார்ப்பனரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கம்தான் நீதிக்கட்சி. பார்ப்பனர்களுடைய ஜாதி அடிப்படையான வைதிக ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பிறந்த இயக்கம்தான் சுயமரி யாதை இயக்கம். ஆக இரண்டு குறிக்கோளும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகத்தின் இலட்சியம். அதை அரசியல் மூலம், சட்டத்தின் மூலம் நிலை நாட்டுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
எனவே, அந்த அடிப்படையிலே “தமிழர்” என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படு கிறேன் – ‘திராவிடர்’ என்பதால் நான் உரிமை பெறுகிறேன், என்று நான் அவர்களிடத்திலே சொன்னேன். அக்காலத்தில் சமயச் சார்புள்ள பெரியவர்களிடமெல்லாம் நான் பழகக்கூடிய வாய்ப்புப் பெற்றிருந்த காரணத்தால் அவர்கள் “எதற்கு இந்தத் ‘திராவிடர்’? ஆதிதிராவிடரோடு உங்களைச் சேர்த்து வைத்துக் கொள்வதிலே என்ன பெருமை உங்களுக்கு?” என்று கேட்பார்கள்.
நான் அவர்களுக்குச் சொன்ன பதில்: ஆதிதிராவிடன்தான் இந்த நாட்டின் முதல் தொல்குடிமகன். அவர்களுடன் சேர்ந்தால்தான் திராவிடர்களுடைய இனவுரிமையும் பாது காக்கப்படும் என்று பதில் சொன்னேன். மனிதத் தன்மையைக் காப்பாற்றவும், அதுதான் வழி – தீண்டாமையை ஒழிக்கவும் அதுதான் வழி – வரலாற்று மறுமலர்ச்சிக்கும் அதுதான் வழி என்று அன்றைக்கு விளக்கம் சொன்னேன்’’ என்றார்.