புதுடில்லி, நவ. 13- காப்பீடு ஆவணத்தில் காப்பீடு தொடா்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி எளிமையான மொழி நடையில் குறிப்பிட வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (அய்ஆா்டிஏ) அறிவுரைக் குழு வலியுறுத்தியுள்ளது. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு என அனைத்திலும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருப்பது வழக்கம். ஆனால், அவை எளிதில் புரிந்து கொள்ள முடியாமலும், பல்வேறு அா்த்தங்களைத் தருவதாகவும் உள்ளதாக விமா்சனங்கள் உள்ளன. இதனால், தீா்ப்பாயங்களில் காப்பீடு தொடா்பான வழக்குகள் அதிகம் வருகின்றன.
இந்நிலையில் அய்ஆா்டிஏ அமைப்பின் காப்பீட்டு குறைதீா்ப்பாயத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினா் புஷ்பா கிரிமாஜி இது தொடா்பாக கூறியதாவது:
காப்பீடு ஆவணத்தில் காப்பீடு தொடா்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி எளிமையான மொழி நடையில் குறிப்பிட வேண்டும். எதற்கெல்லாம் புகார் அளிக்க முடியாது என்ற பட்டியலைக் குறைக்க வேண்டும். அதே நேரத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் மீது அதிக புகார்கள் வரும் அளவுக்கு செயல்பாடுகள் இருக்கக் கூடாது.
பாலிசிதாரா்களின் காப்பீடு கோரல்களை மிகவும் நியாயமாக பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.