சென்னை, நவ. 13- உலக வங்கி நிதியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைக்கப்படும் இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதிகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.449 கோடியே 59 லட்சம் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்திருப்பதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலக வங்கி நிதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ரூ.1.09 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டிருப்ப தாவது: கடந்தாண்டு இறுதியில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.280 கோடி, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.350 கோடி என மொத்தம் ரூ.630 கோடி, உலக வங்கி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியது.
ஆனால், தமிழ்நாட்டில் உலக வங்கி நிதியில், நீர்வள நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் இடங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு மட்டுமே நிதி வழங்க முடியும் என தெரிவித்ததுடன், அந்த இடங்களையும் அடையாளம் கண்டு அவற்றை சீரமைக்க அவசரகால சிறப்பு நிதியாக ரூ.449 கோடியே 59 லட்சம் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபோல உலக வங்கி நிதி ஒதுக்கும்போது, ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்புப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன்படி, உலக வங்கி நிதியுடன் மதுரை மண்டலத்தில் சித்தார், பச்சையாறு, கீழ் தாமிரபரணி, நம்பியாறு, கல்லூர், கடனாநதி ஆகிய இடங்களிலும் சென்னை மண்டலத்தில் ஆரணியாறு, கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் ஆறு ஆகிய இடங்களிலும் ரூ.449.59 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதனிடையே, இந்தப் பகுதிகளில், ஏரிகள், கால்வாய்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை சிறையில் உள்ள
தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்க!
பாம்பன் பாலத்தில் மறியல்
ராமேசுவரம், நவ.13- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து நேற்று (12.11.2024) பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை தமிழ்நாடு மீனவர்களின் 66 படகுகளை சிறைப்பிடித்து, 497 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள், அந்நாட்டின் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்பபடுகிறது. இதில் 90 மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரையிலும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வழங்கப்பட்டு இலங்கை சிறைகளில் தண்டனை கைதிகளாக உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10.11.2024 அன்று 16 ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதும், ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நவம்பர் 12இல் பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என அறிவித்தனர்.
இந்த போராட்ட அறிவிப்புக்கு நாட்டுப்படகு மீனவ அமைப்புகளும் ஆதரவு அளித்தன. முன்னதாக திங்கட்கிழமை ராமேசுவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் நடத்திய அமைதிக்குழு கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் மீனவர்கள் அறிவித்தபடியே நேற்று (12.11.2024) காலை 9.30 மணியளவில் பாம்பன் சாலைப் பாலம் துவங்கும் இடத்தில் மறியல் போராட்டம் துவங்கியது. இந்த சாலை மறியல் போராட்டத்தினால் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. போராட்டம் துவங்கிய போது மீனவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.பாம்பனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் சுமார் அய்நூறு மீனவர்களும், பெண்களும் கொண்டனர்.