குவெட்டா, நவ.10 பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சூழலில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து நேற்று (9.11.2024) காலை தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.குவெட்டா ரயில் நிலையத்தில் காலை 8.30 மணி அளவில் ஏராளமான ராணுவ வீரர்கள் காத்திருந்தனர். அப்போது, பெஷாவர் செல்லும் விரைவு ரயில் அங்கு வந்தது. ராணுவ வீரர்கள் மற்றும் ஏராளமான பயணிகள் அதில்ஏற முயன்றனர். அப்போது, ராணுவத்தினரை குறிவைத்து, பயணிகள் கூட்டத்தில் இருந்த தற்கொலைப் படைதீவிரவாதி ஒருவன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.இதில் 16 ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 46 வீரர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.