வாசிங்டன், நவ.7- அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் குடியுரிமை கொள்கை கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குழந்தைகளுக்கான தானியங்கி குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வருவது ஆகும். ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்கும் முதல் நாளிலேயே இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப்பால் அமல்படுத்தப்படவுள்ள குடியுரிமையை நன்கு கூர்ந்து கவனித்தால்,அவரது அந்த உத்தரவு சட்டவிரோதமாக குடியேறிய குழந்தைகளுக்கு மட்டுமானதாக முடிந்துவிடாது. அது மேலும் பலரை பாதிக்கும். குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் பின்னடைவைஏற்படுத்தும்.
அத்துடன், 10 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாடு அவர்களுக்கு பாதகமாக அமையும். எனினும், ட்ரம்ப்பின் இந்த திட்டம் அமெரிக்கஅரசியலமைப்பின் 14ஆவது திருத்தத்தை மீறுவதால் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள் தானியங்கி குடியுரிமையை பெறுவதற்கு குறைந்தபட்சம் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்பது ட்ரம்ப்பின் நிலைப்பாடாக உள்ளது.