சபரிமலை, நவ.7 ‘சபரிமலை வரும் பக் தர்களின் இருமுடி கட்டில் கற்பூரம், சாம் பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்’ என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை பக்தர்கள், கொண்டுவரும் இருமுடி கட்டில் நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். நெய் தேங்காயில் உள்ள நெய்யை பாத்திரத்தில் எடுத்து, அய்யப்பனுக்கு அபிசேகத்திற்கு வழங்குவர். 18 படிகளில் ஏறும் போது, தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. அரிசியை, பாயசம் வழிபாடு கவுன்டர்களில் வழங்க முடியும்.
மீதமுள்ள சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருள்களை மாளிகைப்புறம் கோவில் அருகே பக்தர்கள் விட்டுச் செல்கின்றனர். இவற்றை பூஜைக்கு பயன்படுத்த முடியாததால், பக்தர்கள் அவற்றை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று தந்திரி, மேல்சாந்தி போன்றோர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனினும், பக்தர்கள் இவற்றை கொண்டு வந்து மாளிகைப்புறம் அருகே போடுகின்றனர். இவை, கனரக இயந்திரங்கள் மூலம் எடுத்துச் சென்று, காட்டுப்பகுதியில் எரிக்கப் படுகின்றன.
எனவே, இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட் களை எடுத்துவர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று (6.11.2024) வேண்டுகோள் விடுத்துள்ளது.