கட்டுரைத் தொடர் (8)
– கி.வீரமணி –
“சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்!” என்கிற தலைப்பில், 13.8.2024 அன்று 7 ஆவது தொடர் கட்டுரையாக ‘விடுதலை’யில் 26-7-1952 அன்று வெளிவந்த- தலையங்கத்தை எடுத்துக்காட்டி எழுதியிருந்தோம்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணிபற்றி இக்கட்டுரையில் காண்போம்!
தந்தை பெரியார் 1925 ஆம் ஆண்டு தொடங்கிய சமுதாய இயக்கம் – நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம் – சமூகநீதிக்காக 1916 இல் தொடங்கப் பெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி – ஜஸ்டிஸ் பார்ட்டி என்ற அரசியல் கட்சியும் இணைந்து, பின்னாளில், திராவிடர் கழகமாக பரிணாமம் பெற்றது என்பது வரலாறு ஆகும்.
1949 இல் அறிஞர் அண்ணாவால் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி தொடங்கப்பட்ட தி.மு.க. முதலில் சமூக கட்சியாகவே இருந்தது. அடுத்த 8 ஆண்டுகளில் அரசியல் கட்சியாக பகிரங்கமாய் மாற்றப்பட்டது என்றாலும், அறிஞர் அண்ணா முன்யோசனையோடும், தகுந்த கருத்தாக்க இலக்கும் கொண்டு, ‘‘தந்தை பெரியார்தான் எங்கள் தலைவர்; பெரியார் தந்த கொள்கைகள்தான் எங்கள் கட்சியின் கொள்கை – முறையில் ஒரே ஒரு மாற்றம் தேர்தல் மூலம் அரசியலில் ஈடுபட்டு, கொள்கைகளுக்கு சட்ட வடிவம் தருவது தி.மு.க.வின் இலக்கு. அதனால்தான் தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகும்’’ என்று பொருத்தமாக உவமித்தார்!
18 ஆண்டுகளுக்குப் பின் அதனை செயல்மூலம் நிரூபிக்கவும் செய்தார்!
1967 இல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது, திருச்சியில் இருந்த தந்தை பெரியாரைச் சந்தித்து, அவரது வாழ்த்தைப் பெற்று, வழிகாட்டலையும் வேண்டினார் அறிஞர் அண்ணா!
ஆரியம் ஏமாந்தது! எதிர்ப்புக் காட்டத் தொடங்கியது. திராவிடமோ – மகிழ்ந்து வரவேற்றது!!
இந்தத் திருப்பமான அரசியல் முடிவுகள் – அவை தொடருகின்றன!
தாய்க்கழகம் தனது கடமையிலிருந்து தவறாது தி.மு.க.வுக்குப் பாதுகாப்புக் கேடயமாகவும், முன்னோடிக் காவலராகவும் கடமையாற்றி வருகிறது!
இப்படி ஒரு வித்தியாசமான அரசியல் வரலாறு தமிழ்நாட்டு திராவிட மாடலின் அரசின் தொடக்க கால செயற்பாடுகளின் சாதனைகளாகத் தொடங்கி இன்றும் தொடருகிறது இந்தியாவில்!
எங்கும் இதற்கு இணை கிடையாது!
1929 இல் முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள் எல்லாம் சட்ட வடிவம் பெற்ற அரிய சாதனை தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் அண்ணா தொடங்கி, முதலமைச்சர் கலைஞர் பிறகு இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை தொடர்கின்றன.
இடையில் எத்தனையோ அடக்குமுறைகளும், இரண்டையும் பிரிக்க சூழ்ச்சிகளும், வியூகங்கள் எல்லாம் பிரயோகப்படுத்தப்பட்டன – இன எதிரிகளால். ஆனால், அவர்களது ஆசை நிராசையாகத்தான் ஆகியது! அவை தோற்றுப் போயின.
அரை நூற்றாண்டு திராவிட ஆட்சியின் முத்திரைதான் தமிழ்நாட்டு மண்ணில்.
தொடர்ந்து மக்களவைத் தேர்தலிலும் இந்த வெற்றிகள் வளர்ந்து, ஒன்றிய அரசில் தி.மு.க. அமைச்சர்கள் பொறுப்பேற்று, பல சமூகப் புரட்சி சட்டங்களை நிறைவேற்றி வைக்க காரண கர்த்தாக்களாக அமைந்தனர்.
எடுத்துக்காட்டாக,
1. ஹிந்து சட்டத்தில் பெண்களுக்குச் சம சொத்துரிமை சட்டத் திருத்தம் 2006 இல் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இதே சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார்; காங்கிரஸ் ஸநாதனிகள் அதை நிறைவேற்றி வைக்க கடும் எதிர்ப்புக் காட்டினர். ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் மனம் நொந்து, தனது அமைச்சர் பதவியிலிருந்தே விலகினார்.
பிறகு கலைஞர், காங்கிரஸ் தலைமையில் அமைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, அதில் பங்கும் பெற்று, தனது அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவினால், ஹிந்து லா படி, பெண்களுக்கு, ஆண்களைப்போல சம பங்கு சொத்துரிமை தரும் சட்டத்தை நிறைவேற்றி வெற்றி கண்டார்!
2. மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் ஒன்று வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் என்பதே! ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு, 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலம் ஒன்றிய அரசு கல்வி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீடு தரவும், மற்ற 23 சதவிகிதம் எஸ்.சி., எஸ்.டி.,க்குத் தருவதே, எஞ்சிய 50 விழுக்காடு பொதுப் போட்டி Open Competition மூலம் தேர்வு என்பதையும் முழுமைப்படுத்தப்பட்ட நிலை!
(அ.தி.மு.க. ஆட்சியில் – எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதலமைச்சர்களான நிலையில், நமது போராட்டத்தினாலும், வழிகாட்டலினாலும் இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 50 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பின்னாளில், மண்டல் பரிந்துரையினால் ஏற்பட்ட ஒரு சட்ட சிக்கலையும் சேர்த்து, 69 சதவிகித ஒதுக்கீட்டிற்காகத் தனிச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி, 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, 9 ஆம் அட்டவணை பாதுகாப்புடன். (நாடாளுமன்றத்தில் விவாதமின்றியும், எதிர்ப்பின்றியும் நிறைவேற்றப்பட்டு வரலாறானது).
1. கல்விப் புரட்சி, 2. மருத்துவப் புரட்சி, 3. தொழில் வளர்ச்சிப் புரட்சி ஆகியவை ‘திராவிட மாடல்‘ ஆட்சியில் தமிழ்நாட்டில் கரைபுரண்டு ஓடும் நிலை கண்டு உலகம் வியப்படைகிறது!
கல்வியை உயர்ஜாதிப் பார்ப்பனரின் ஏகபோக உடைமையாக்கி வைத்து நம் பிள்ளைகள் இறங்க முடியாத, பார்ப்பன முதலைகள் நிறைந்த கல்வி நீரோடையில் இன்று ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்னும் அறைகூவலோடு மதிய இலவச உணவுடன், காலைச் சிற்றுண்டியும் இலவசமாகக் கிட்டும்படிச் செய்து, தமிழ்நாடெங்கும் பாய்ந்தது கல்வி நீரோடை என்ற உண்மை வரலாறாகி வைர வரிகளாயின!
அக்கால சுயமரியாதை – திராவிடர் கழக – திராவிடர் இயக்கங்களின் தீர்மானங்கள் சட்ட வடிவத்துடன் பேருரு எடுத்தன. எடுத்து வருகின்றன.
இரண்டு முனைகள் – இணையற்ற அரசியல் புத்தாக்கங்கள்!
ஒன்று சமுதாய முனை; மற்றொன்று அரசியல் களம். இரண்டும் இணைந்து முழு வெற்றியை நோக்கி ‘திராவிட அரசியல்‘ நாளும் புதுப்புது வளர்ச்சி காணும் சமூகங்களாகி, ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் வாழ்வு புதுவாழ்வாகவே மாறிவருவது கண்கூடு!
என்றாலும், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, மகளிர் சம உரிமை, சம வாய்ப்பு இலக்கு, மூடநம்பிக்கை ஒழிந்த ஒரு சமுதாயம் ஒவ்வொரு நாளும் செயல் வடிவம் பெற்று ஜொலித்து, நம்மை பெருமிதம் கொள்ளச் செய்யும் பணியில் செய்தவற்றைவிட, செய்யவேண்டியவைகளே ஏராளம்! ஏராளம்!!