கோவிலுக்குச் சென்றால் நரபலியா?
லக்னோ, நவ.2- உத்தரப்பிரதேசத்தில் கோவிலுக்குச் செல்வதாக கூறிச்சென்ற 2 சிறுவர்கள் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தனர்.அவர்கள் நரபலி செய்யப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் தெரி வித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பயல் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவ் (வயது 11), மகி (9). இவர்கள் இருவரும் உறவினர்கள். தீபாவளி அன்று அவர்கள் இருவரும் அங்கிருக்கும் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர்.
நீண்டநேரமாகியும் சிறுவர்கள் இருவரும் வீட்டுக்கு திரும்பாததால், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இருப்பினும் சிறுவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே தியோபந்த் பகுதியில் உள்ள சாலையோரத்தில் தேவும், மகியும் பிணமாக கிடந்தது நேற்று காலை தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு, உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே நேரத்தில் சிறுவர்களின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர்கள் நரபலி செய்யப்பட்டதாகவும் சிறுவர்களின் பெற்றோர் தெரி விக்கிறார்கள். எனவே, இது குறித்தும் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.