ராஞ்சி, நவ.1 ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் மொத்தம் 685 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஜாம்ஷெட்பூர் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 28 வேட்பாளர்களும் ஜகநாத்பூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 8 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ஆவது கட்ட தேர்தல் நடைபெறும் 38 தொகுதிகளில் 29.10.2024 அன்று வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் தேர்தல் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இம்மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் அக்டோபர் 18-ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. அக்டோபர் 25-ஆம் தேதியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 805 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனைக்குப் பின்னர் 743 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாளில் 58 பேர் திரும்பப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து 43 தொகுதிகளில் நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 685 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 28 பேரும் ஜகநாத்பூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 8 பேரும் களம் காண்கின்றனர்.
2019-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த 43 தொகுதிகளில் மொத்தம் 633 பேர் போட்டியிட்டிருந்தனர்.
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் ரூ121.14 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் இந்த தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் தேர்தல்களில் அதிகாரிகளால் மிக அதிகமாக இந்த முறைதான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதனிடையே ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல்களை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடன் 3 மாவோயிஸ்டு தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.