கோபி. அக், 31- பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கேட்டலும், கிளத்தலும் வகுப்பில் இருபால் மாணவர்களின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாணவர்கள் அசந்து போகும் அளவுக்கு பதிலளித்து சிறப்பித்தார்.
ஆசனூர் சுற்றுலா விடுதியின் சிறப்பு!
பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு இதுவரை அமைந்த இடங்களிலேயே மிகவும் சிறந்த இடமாக அமைந்து விட்டது, ’Destination Dream Holiday India Ltd’ அமைப்பின், சுற்றுலா விடுதி. இது சத்தியமங்கலம் தாளவாடி அருகே பழைய ஆசனூரில் உள்ளது. அதன் பெயரே, ”பழைய ஆசனூர் சுற்றுலா விடுதி” தான். (Old Hasanur Resorts) இவ்விடமானது சுற்றுச்சூழல்! காலநிலை, வகுப்பரங்கம்! சிறப்பான தங்கும் இடங்கள்! உரைக்காத வெப்பம்! மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லாதது! பனிப் பொழிவு இல்லாமலேயே அந்த உணர்வு! கண்களைக் கட்டிப்போட்டுவிடும் விடுதியை ஒரு பாதுகாப்புச் சுற்றுச்சுவர் போல, ஓங்கி உயர்ந்து வரிசையாக நின்றிருந்த பாக்கு மரங்களின் சிறப்பு! மாசில்லாத காற்று! இப்படி வகுப்பு நடத்துவதற்கான எல்லா வாய்ப்புகளையும் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட விடுதிக்கு ஈரோட்டிலிருந்து ஆசனூர் சுற்றுலா விடுதிக்குச் செல்லும் திம்பம் – மைசூர் நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருந்தன. ஒவ்வொரு வளைவிலும் சுவர் எழுத்துகளில் கழகத் தலைவரின் பெயர், கழகக் கொடிகள், இடையில் மக்கள் வசிக்கும் சிறு கிராமம் அல்லது சிறு பாலங்கள் வந்தால் சாலையின் இருபுறமும் வரிசைகட்டி நிற்கும் கழகக் கொடிகளுடன் பதாதைகள் என்று மாவட்டக் கழகமும் அசத்தியிருந்தது. மலையின் அடிவாரத்திலிருந்து ஆசனூர் சுற்றுலா விடுதி வரையிலும் இதே நிலைதான்.
மாணவர்கள் அதிகம் கலந்து கொண்ட பயிற்சி முகாம்!
இப்படிப்பட்ட ஒரு சிறப்பான இடத்தில்தான், கோபிசெட்டிபாளையம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அக்டோபர் 26, 27 (சனி, ஞாயிறு) இரண்டு நாட்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேறெங்கும் இல்லாத அளவுக்கு இருபால் மாணவர்கள் 132 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (பள்ளி: ஆண்கள் 34, பெண்கள் 15 – கல்லூரி: ஆண்கள் 52, பெண்கள் 31) இதில் ஒரு சிலரே ஏற்கனவே இதுபோன்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள். மற்றபடி அனைவரும் புதிய தோழர்கள். மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி இளநிலை, முதுநிலை என்று எல்லா தரப்பிலிருந்தும் வந்திருந்தது சிறப்புக்குரியது. அந்த அளவுக்கு மாவட்டப் பொறுப்பாளர் களப்பணி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் காலை 9:30 முதல் இரவு 9:45 வரை மொத்தம் 9 வகுப்புகள் நடைபெற்றன. தேக்கம்பட்டி சிவக்குமார் தலைமையில் அவரது சமையல் கலைஞர்கள் உணவு தயாரித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் செ.சண்முகசுந்தரம், தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் என்.சி.சண்முகம், இந்திய தேசிய காங்கிரஸ் நம்பியூர் வட்டாரத் தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், கோபிசெட்டிபாளையம் மூத்த செய்தியாளர் ஆர்.ரமேஷ், ஆதித் தமிழர் பேரவை ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உணவு பரிமாறும் பணிகளை செம்மையாக செய்து கொடுத்தனர்.
இரண்டாம் நாள் வகுப்புகள்!
இரண்டாம் நாளில் காலை 9 மணிக்கு முதல் வகுப்பாக கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ”தந்தை பெரியாரின் பெண்ணுரிமைகள்” எனும் தலைப்பிலும், இரண்டாம் வகுப்பாக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், “புராண, இதிகாச புரட்டுகள்” எனும் தலைப்பிலும், மூன்றாம் வகுப்பாக கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்” எனும் தலைப்பிலும், நான்காம் வகுப்பாக கழகத்தின் தலைவர், ”கேட்டலும், கிளத்தலும்” எனும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகுப்புமாக மொத்தம் நான்கு வகுப்புகள் நடைபெற்றன.
இறுதியில் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களின் சார்பாக இருவர் பேசினர். முதலில், சீத்தாலட்சுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ.,பொருளாதாரம் பயிலும் திருப்பூர் மதுமிதா பேசும் போது, “இங்கு நடத்தப்பட்ட வகுப்புகளில், பேசிய கருத்துகளை இதுவரை நான் கேட்டதே இல்லை” என்றார். “இதற்குப் பிறகு பெரியாரின் புத்தகங்கள் வாங்கிப் படித்தால் இன்னும் நன்றாக புரியும்” என்றார். நான் பயிலும் கல்லூரி பார்ப்பனர் மேலாண்மையில் நடக்கிறது. அந்தக் கல்லூரிக்குப் பெரியார் வந்திருக்கிறார். அப்போது அவரிடம், ‘நீங்கள் பார்ப்பனர்களை அதிகம் எதிர்த்து பேசிக் கொண்டே இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கின்றீர்களே” என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்குப் பெரியார், ‘யாராக இருந்தால் என்ன நம் பெண் பிள்ளைகள் படிப்பதற்கு கல்லூரியைக் கட்டி நடத்துகிறார்கள். இது ஒன்று போதுமே நான் வருவதற்கு’ என்று பதில் சொல்லியிருக்கிறார்” என்று பேசியதும் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அதேபோல் கொங்கர்பாளையம் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கர், “பயிற்சி முகாமில் பெற்ற பல இயக்கக் கருத்துகளை சுட்டிக் காட்டி விட்டு, “நாங்கள் பெற்ற இந்த அருமையான வாய்ப்பை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பெற வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்து முடித்துக்கொண்டார். கழகத் தலைவர் ஆசிரியர் இருவரையும் பாராட்டினார்.
மாணவர்களுடன் கலந்துரையாடிய கழகத் தலைவர்!
அதன்பிறகு, மாணவர்களின் கேள்விகளுக்கு கழகத்தின் தலைவர் ஆசிரியர் பதில் சொல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த வகுப்பை பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஒருங்கிணைத்து கேள்விகளை வாசித்தார். முதல் கேள்வி ”திராவிடர் கழகத்தின் அரசியல் பார்வை என்ன?”, இரண்டாவதாக, ”ஆணாக இருந்த பெரியார், பெண்களுக்கு அதிகமாகப் பேசியது, எப்படி?”, மூன்றாவதாக, “ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தொடர்ந்து செய்தும் ஜாதி ஒழிய வில்லையே, ஏன்?”, நான்காவதாக, “கிராமங்களில் ஊர், சேரி இன்னமும் இருப்பது ஏன்?”, அய்ந்தாவதாக, ”போதைகளுக்கு ஆளாகும் இளைஞர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?”, ஆறாவதாக, “தனியார் நிறுவனங்களில் ஒடுக்கப்பட்டவர்களை பணியில் சேர்ப்பதில் சிக்கல் உள்ளது, ஏன்?” உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. ஆசிரியர், பொறுமையாக உரிய பதில்களை அளித்தார். மாணவர்கள் ஒவ்வொரு கேள்விக்கு ஆசிரியர் பதில் சொல்லி முடித்ததும், கையொலி செய்து பதிலில் கிடைத்த மனநிறைவை கையொலி எழுப்பி காட்டினர். ஆணாக இருந்து பெரியார் அதிகமாக பெண்களுக்காக பேசியுள்ளாரே, எப்படி? என்ற கேள்விக்கு கழகத் தலைவர், ”பெரியார் ஆணாக இருந்து பேசவில்லை. மனிதனாக இருந்து பேசினார். காரணம், அவர் ஒரு முழு பகுத்தறிவுவாதி, உலக மகா சமூக விஞ்ஞானி என்று பதிலளித்தார். ஆழமான இந்த பதிலை எதிர்பார்க்காத மாணவர்கள் வியந்து கைதட்டி மகிழ்ந்தனர். இப்படியே ஒவ்வொரு கேள்விக்கும் ஆசிரியர் வெளிப்படையாக பதில் அளித்து மாணவர்களை வியப்பில் ஆழ்த்தினார். கேள்வி கேட்ட அனைத்து மாணவர்களையும் ஆசிரியர் பாராட்டினார். முன்னதாக முதல் நாள் இறுதி வகுப்பாக திரையிடப்பட்ட பெரியார் திரைப்படத்தை பார்த்தவர்கள் எத்தனை பேர்? என்று ஆசிரியர் மாணவர்களை நோக்கி வினா எழுப்பினர். 81 இருபால் மாணவர்கள் கை தூக்கினர். அவர்களில், மாணவர்கள் இரண்டு பேர், மாணவிகள் இரண்டு பேர் பெரியார் படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சி பற்றி குறிப்பிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். நால்வரும் சிறப்பான காட்சிகளை தங்களுக்குப் பிடித்த காட்சிகளாகக் கூறி ஆசிரியரிடம் வாழ்த்துகளையும் பாராட்டையும் பெற்றனர். இறுதியாக ஆசிரியருடன் மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் குழு ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
மாணவர்கள் பெற்ற வெற்றியும், பரிசுகளும்!
முதல் நாளிலிலேயே சிறப்பாக குறிப்பு எடுக்கிற மூவருக்கு பரிசுகள் உண்டு என்று பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளரும், கழக மாநில ஒருங்கிணைப் பாளருமான தஞ்சை இரா.ஜெயக்குமார் அறிவிப்பு செய்திருந்தார். அப்படி மூவரை தேர்வு செய்ய முயன்ற ஆசிரியர் குழுவுக்கு சோதனை ஏற்பட்டுவிட்டது. காரணம், எட்டு மாணவர்களை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த பெரும்பாலானோர் சிறப்பாக குறிப்புகள் எடுத்திருந்தனர். ஓரிருவர் இரண்டு குறிப்பேடுகளை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பரிசு திருப்பூர் மதுமிதா, இரண்டாம் பரிசு சத்தியமங்கலம் மு.பசுபதி, மூன்றாம் பரிசு புன்செய் புளியம்பட்டி அ.அஜித் குமார், நான்காம் பரிசு வண்டிப்பாளையம் வி.கே.அரவிந்த்ராஜ், அய்ந்தாம் பரிசு நல்லூர் த.தமிழருவி, ஆறாம் பரிசு வண்டிபாளையம் கொ.விஸ்வநாதன், ஏழாம் பரிசு அந்தியூர் மு.கலாநிதி, எட்டாம் பரிசு சா.ஜனார்த்தனன் ஆகியோருக்கு புத்தகங்களை பரிசாக கழகத் தலைவர் ஆசிரியர் வழங்கி சிறப்பித்தார். பரிசு பெறுவதிலும் இந்த பயிற்சி முகாம் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
50% தள்ளுபடியால் பயன் பெற்ற மாணவர்கள்!
அத்துடன் இயக்கப் புத்தகங்கள் மாணவர்களுக்கு 50% தள்ளுபடியில் வழங்கப்படும் என்று முதல் நாளே, பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்களால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, இரண்டே நாளில் 1,77,306 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை, அதன் பாதி விலையான 88,653 ரூபாய்க்கு பெற்றுக் கொண்டனர். இப்பணிகளை புத்தக விற்பனைத் தோழர்கள் ராஜேந்திரன், குணா, யோகேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு எழுதுகோல், குறிப்பேடு காமராஜர் கல்வி அறக்கட்டளை வழங்கியிருந்தது. மனித சட்ட உதவி மய்யம் சார்பில் பயிற்சி முகாம் எழுத்துகள் பொறித்த கருப்பு நிற பனியன் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி முகாம் சிறக்கத் தொண்டாற்றிய தோழர்கள்!
132க்கும் மேற்பட்ட இருபால் புதிய மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டனர் என்கிற உணர்வு அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரிடமும் தென்பட்டது. அதிலும் குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் மற்றும் செயலாளர் வெ.குணசேகரன், தலைமைக்கழக அமைப்பாளர் த.சண்முகம், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் த.சிவபாரதி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ.குப்புசாமி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ப.வெற்றிவேல், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.அஜித் குமார், மாவட்ட மாணவர் கழக தலைவர் மா,சூர்யா, தலைமைக்கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், சின்னாரிபாளையம் கிளைத் தோழர்கள்; மயில்சாமி, சந்தோஷ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் த. எழில் அரசு, தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம் மாணவர் கழக தலைவர் பெ. விக்னேஷ், தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் பயிற்சி முகாம் சிறக்க ஒத்துழைத்தனர். கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளருமான தஞ்சை இரா.ஜெயக்குமார், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முதல் நாளே அங்கே சென்று, தொடக்கம் முதல் பயிற்சி முகாம் முடியும் வரை இருந்து பயிற்சி முகாம் சிறக்க, சிறப்பாக வழி நடத்தினார். அனைவரையும் கழகத் தலைவர் ஆசிரியர் பாராட்டினார், வாழ்த்தினார்.