பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் ‘இடி நவ்’ (ET Now) தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டமிடலில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் கருத்துகளைப் பெற்று ஆய்வு செய்து வருவதாகக் கூறினார். இந்த அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. பின்னர், இந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்தது.
மேலும், பல்வேறு மாநில அரசுகள், கல்வி யாளர்கள், தொழில்துறை அமைப்புகளுடன் 2,700-க்கும் மேற்பட்ட கூட்டங்கள், பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் பிரதமர் மோடி, ஏஎன்அய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், இந்த ஆலோசனைகளின் செயல்முறையை விரிவாக விளக்கினார்.
அனைத்து பல்கலைக்கழகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு கருத்துகளைப் பெற்றதாகவும், அவற்றை செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வகைப்படுத்தியதாகவும் கூறினார். இந்தத் திட்டம் 25 ஆண்டுகள், 5 ஆண்டுகள் மற்றும் 100 நாட்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் கூட தெரிவித்தார்.
அதிர்ச்சி அளித்த பிரதமர் அலுவலகம்
ஆனால், இந்த ஆலோசனைகள் குறித்த விவரங்களை தகவல் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்டபோது, பிரதமர் அலுவலகம் அதிர்ச்சி தரும் பதிலை அளித்துள்ளது. கோரிக்கை “குறிப்பிட்டதாக இல்லை” என்றும், “பொருத்தமற்ற மற்றும் முடிவற்ற விசாரணை வடிவில் உள்ளது” என்றும் கூறி தகவல்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. மேலும், இந்தக் கோரிக்கை தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(f)-இன் கீழ் வராது எனவும் தெரிவித்துள்ளது. இந்த மறுப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுபற்றி காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் வெங்கடேஷ் நாயக் கூறுகையில்,
கோரப்பட்ட கேள்விகளுக்கான பதிவுகள் இல்லை என்றால் அதை தெளிவாகத் தெரி விக்க வேண்டும் என்று சட்டத் தீர்ப்புகள் வலி யுறுத்துவதை சுட்டிக்காட்டியுள்ளார். தகவல் உரிமை ஆர்வலர் காந்தி, பிரதமர் அலுவலகத்தின் இந்த மறுப்பை “கண்டனத்திற்குரியது” என விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் தகவல் உரிமைச் சட்டத்தின் செயல்பாடு குறித்து சதர்க் நாக ரிக் சங்கதன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கவலை அளிக்கிறது. நான்கு மாநில தகவல் ஆணையங்கள் பல மாதங்களாக செயலி ழந்துள்ளன. மத்திய தகவல் ஆணையமோ 11 இடங்களுக்கு வெறும் மூன்று ஆணையர்களுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிடும் வெளிப்படைத் தன்மை, நல்லாட்சி ஆகியவற்றுக்கும், தகவல் உரிமைக் கோரிக்கைகளுக்கு அளிக்கப்படும் மறுப்புகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு, ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. மக்களின் அடிப்படை உரிமையான தகவல் அறியும் உரிமையை மோடி அரசு குழிதோண்டிப் புதைக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.