மும்பை, அக்.25 மகாராட்டிரத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவார்), சிவசேனை கட்சிகள் தலா 85 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகள் பிற கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜவாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட மாநிலத்தின் சிறிய கூட்டணி கட்சி களுக்கு ஒதுக்கப்படவுள்ளது.மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் மிக முக்கியமான மாநிலம் என்பதால் மகாராட்டிர மாநில சட்டப் பேரவைத் தோ்தல் தேசிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நவம்பா்
20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, பாஜக, துணை முதலமைச்சர் அஜீத் பவார் தலைமையிலான சிவசேனை ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே இந்தத் தோ்தலில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கூட்டணி வெற்றி பெற்றால் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகத் தொடா்வார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி அணியில் முதலமைச்சர் வேட்பாளா் யார் என்பதில் கடும் போட்டி இருந்தது. ஏற்கெனவே அந்தக் கூட்டணி சார்பில் முதலமைச்சராக இருந்த காரணத்தால் உத்தவ் தாக்கரேவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவரது தலைமையிலான சிவசேனை மறைமுகமாக வலியுறுத்தி வந்தது.ஆனால், அண்மையில் அரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, மகாராட்டிரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு கூட்டணியில் முறிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் முதலமைச்சர் வேட்பாளா் இன்றி தோ்தலைச் சந்திக்க முடிவு செய்தன. எனினும், அதிக தொகுதிகளில் வெல்லும் கட்சிக்கே முதலமைச்சர் பதவி என்று கூறப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் – சரத் பவார் கட்சி, உத்தவ் தாக்கரே கட்சி ஆகியவை தலா 85 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த் தைக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரவ்ளத், ‘தொகுதி எண்ணிக்கை உறுதி செய்யப்பட்ட நிலையில் தங்கள் கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களில் போட்டியிட கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே ஆா்வம் காட்டின. இப்போதைய நிலையில் 270 தொகுதிகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகுதிகள் குறித்தும் விரைவில் முடிவு எட்டப்படும். இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
முன்னதாக, தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்தபோது மாநில காங்கிரஸ் தலைவா்கள், சரத் பவாரைச் சந்தித்துப் பேசினா். அவா் ஆலோசனையின் பேரில் சிக்கல்களுக்கு தீா்வு காணப்பட்டது.
தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் உத்தவ் தாக்கரே கட்சி சார்பில் 65 வேட் பாளா்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. உத்தவின் மகன் ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.