அகமதாபாத், அக்.23- தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் உடனடியாக பதவி விலகுவது, அவா்களின் பாரபட்ச மற்ற செயல்பாடு குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை பாதிக்கக் கூடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற நீதிபதிகளின் ஆண்டுக் கூட்டத்தில் அவா் 19.10.2024 அன்று பேசியதாவது:
நீதித்துறையின் தா்மம், ஒருமைப்பாடு ஆகியவையே சட்ட அமைப்பின் நம்பகத் தன்மையை நிலைநாட்டும் அடிப்படை தூண்கள். அனைத்து நேரங்களிலும் நீதித் துறையின் தா்மத்துக்கு ஏற்ப நீதிபதியின் நடத்தை இருக்க வேண்டும்.
ஓா் அரசியல் தலைவா் அல்லது அரசு அதிகாரியை நீதிபதி ஒருவா் புகழ்வது நீதித்துறை மீதான பொது மக்களின் நம்பிக்கையை பாதிக்கக் கூடும். உதாரணத்துக்கு தோ்தலில் போட்டியிடுவதற்காக நீதிபதியாக இருப்பவா் உடனடியாக பதவி விலகு வது, அது அவரின் பாரபட்சமற்ற செயல்பாடு குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை பாதிக்கக் கூடும்.
குறிப்பிட்ட வழக்குகளின் வரம்புக்கு அப்பாற்பட்டு பாலினம், ஜாதி, மதம், அரசியல் போன்ற மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய விவகாரங்கள் குறித்து நீதிபதிகள் விரிவாகக் கருத்து தெரிவிப்பது கவலைக்குரியது.
நீதிமன்றங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைந்தால் சட்டத்தை தாமாக கையில் எடுத்துக்கொள்ளும் கும்பல்களை நாடுவது, லஞ்சம் அளிப்பது போன்ற முறைகேடான வழிகளில் நீதிபெற முயற்சிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவா்.
இது சமூகத்தில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும். இந்த நிலை ஏற்படாமல் இருக்க நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாப்பது அவசியம் என்றாா்.