ராஜஸ்தானின் சிகாரில் சோபாசாரியா குழும நிறுவனங்களின் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய (19.10.2024) ஜக்தீப் தன்கர், “குழந்தைகளே, நான் உங்களிடம் கூறுகிறேன், மற்றொரு புதிய நோய் உள்ளது, வெளிநாடு சென்று படிப்பது. வெளிநாட்டில் படிக்க பெற்றோருக்கு யாரும் ஆலோசனை கூறுவதில்லை. குழந்தைகள் ஆர்வத்துடன் செல்ல விரும்புகின்றனர். குழந்தைகள் ஒரு புதிய கனவைக் காண்கின்றனர், அங்கு சென்றவுடன் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். எந்த நிறுவனத்துக்குப் போகிறார், எந்த நாட்டுக்குப் போகிறார் என்று எந்த மதிப்பீடும் இல்லை – நான் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற குருட்டுப் பாதைதான் இருக்கிறது – நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுமிகள் விளம்பரங்களால் பாதிக்கப்படுகிறார்கள். 2024இல் 13 லட்சம் மாணவர்கள் வெளிநாடு சென்றனர். அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று மதிப்பிடப்பட்டு வருகிறது,” என்று ஜக்தீப் தன்கர் கூறினார்.
”இந்தப் போக்கு நாட்டிற்கு சுமையாக இருக்கிறது, அவர்கள் நமது வெளிநாட்டு செலாவணியில் 6 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இங்குள்ள கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டால், நமது நிலை என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது வெளிநாட்டுச் செலாவணி இழப்பு” என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறினார்.
‘ஊருக்குத்தான் உபதேசமா’ என்ற பழமொழி அதிகம் வழக்கில் உள்ள ஒரு பழமொழி! அது யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ, அது இப்படிப் பேசிய குடியரசு துணைத் தலைவருக்கும், பிஜேபியினருக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தும்.
1. ஜெகதீப் தன்கர் : இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் மகள் கம்னா தன்கர், அமெரிக்காவின் பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள வார்டன் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஏ.அய். தொழில் நுட்பம் தொடர்பாக படித்துக்கொண்டு இருக்கிறார்
2. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மாய் இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர்
3. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலின் குழந்தைகள் துருவ் மற்றும் ராதிகா கோயல் இருவரும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதலீட்டு வங்கியியல் படித்தவர்கள்.
4. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் – இவரது மனைவி ஜப்பானியர் – மகன் துருவா ஜெய்சங்கர், அமெரிக் காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மற்றும் மெக்கலஸ்டர் கல்லூரியில் பாதுகாப்புப் படிப்பில் எம்.ஏ. படித்துள்ளார்.
5. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பிளெட்சர் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
6. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் நீரஜ் சிங் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார்.
7. மேனாள் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது மகளை அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் எல்.எல்.எம். படிக்க வைத்தார்.
8. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்தியே சவுஹான் யுனிவர்சிட்டி ஆஃப் பென்சில்வேனியாவில் எல்.எல்.எம். படித்துள்ளார்.
9. சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியாமன் சிந்தியா, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துள்ளார்
10. சட்டம் மற்றும் நீதித்துறை மேனாள் அமைச்சர் மற்றும் மின்னணுவியல் மற்றும் அய்.டி. அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் மகன் ஆதித்ய சங்கர் அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.
11. மேனாள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மகள் அபூர்வா ஜவடேகர் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தார்.
12. மேனாள் இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரியின் மகள் திலோத்தமா பூரி இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (BA) படித்தார்.
13. கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் மகள் சுஹாசினி ஷெகாவத் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
14. சுகாதார அமைச்சர் ஜேபி நட்டாவின் மகன் ஹரிஷ் நட்டா இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்
15. மேனாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான வசுந்தரா ராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங், அமெரிக்காவின் ஜான்சன் & வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஓட்டல் நிர்வாகத்தில் எம்.பி.ஏ. படித்தார்.
16. மேனாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் டில்லி பாஜக தலைவருமாக இருந்த ஹர்ஷ் வர்தனின் மகன் சச்சின் வர்தன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் கணக்கியல் படித்தார்.
ஊருக்குத்தான் உபதேசம் என்பதன் பொருள் இப்பொழுது புரிகிறதா?