சென்னை, அக்.22- தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22ஆம் தேதி) காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்,காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, 23ஆம் தேதி, ‘டானா’ புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு, இந்த புயல் சின்னம் வடமேற்குதிசையில் நகர்ந்து வருகிற 24ஆம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதி களில், ஒடிசா-மேற்குவங்காள கடற்கரை பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழ்நாட்டிற்கு பெரிய மழை ஆபத்து இல்லை
2 நாட்கள் கனமழை
இந்த சூழலில், தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் ஒரு வளிமண் டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கருநாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (22ஆம் தேதி) திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை (23ஆம் தேதி) தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 27ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில்
மருத்துவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது
கொல்கத்தா, அக். 22- கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், நியாயம் கேட்டும் இளநிலை மருத்துவர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இன்று (22.10.2024) மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையே போராட்டக்காரர்களுடன் முதலமைச்சர் மம்தா நேற்று (21.10.2024) பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், உண்ணாநிலை போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இதுகுறித்து மருத்து வர்கள் கூறுகையில், ‘அரசின் உத்தரவாதத்தை நாங்கள் நம்பவில்லை, மக்களின் நலன் கருதியும் போராட்டத்தை கைவிடுகிறோம்’ என்று தெரிவித்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் செயல்கள் கவலை அளிக்கின்றன
– உச்சநீதிமன்றம்
புதுடில்லி, அக்.22- குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் விசாரணை அனைத்தும் கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை அறிவிக்கவில்லை. மாறாக ஒரு ஆண்டுக்கு பின் கடந்த ஏப்ரல் மாதம் மனுதாரருக்கு தீர்ப்பு நகலை நீதிமன்றத்தின் அய்.டி. பிரிவு வழங்கியது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஆர்.கே. மிஸ்ரா அமர்வு நேற்று (21.10.2024) விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பலமுறை நினைவூட்டல் களை வழங்கியபோதும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பின்பற்றுவது இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘சமீபகாலங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களின் கற்றறிந்த நீதிபதிகளின் மனப்பான்மை மற்றும் சிந்தனை முறைகளைக் கவனித்த இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்து இருக்கிறது. இது பொதுவாக நீதித்துறை மற்றும் உயர்நீதிமன்றங்களின் நற்பெயரைக் குறைக்கும்’ என்று கூறினர்.
எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறாமல் நீதிபதிகள் கவனமாக இருப்பார்கள் என நம்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.